அநுரவின் யாழ் விஜயம்: வடக்கில் சுவீகரிக்கப்படவுள்ள காணிகள்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை நிறைவு செய்த பின்னர் எழுவைதீவில் கடற்படையின் தேவைக்காக பொதுமக்களின் சுமார் நான்கு அரைப் பரப்பு காணியை சுவீகரிக்கும் அறிவித்தலை நில அளவைத் திணைக்களம் விடுத்துள்ளது.
யாழ் ஊர்காவல்துறைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட எழுவைதீவு இறங்குறைக்கு அருகாமையில் உள்ள கடற்படை முகாம் அமைந்துள்ள தனியார் காணியே இவ்வாறு சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களம் காணி உரிமையாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது.
கடற்படையினர்
குறித்த விடயம் தொடர்பில் காணி உரிமையாளர்களின் ஒருவரான தாய் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

“எமது காணியை 90 ஆம் ஆண்டுகளின் பின்னர் கடற்படையினர் முகாம் அமைத்து தமது தேவைகளுக்காக பயன்படுத்தி வரும் நிலையில் எமது பூர்வீக காணியை இழந்து வாழ்ந்து வருகிறோம்.
தற்போது கடற்படையினர் பயன்படுத்தி வரும் காணியில் சிறிய வீடு ஒன்றை நாம் ஏற்கனவே காட்டி வாழ்ந்து வந்த நிலையில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எமது சொந்த வீட்டுக்கு திரும்ப முடியாதவர்களாக உள்ளோம்.
எனது கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மகன் மனநலம் பாதிக்கப்பட்டவராக காணப்படுகிறார். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இவர்களை பராமரித்து வரும் நிலையில் கடற்படை அமைந்துள்ள எனது காணியின் ஒரு பகுதியை மீண்டும் பெற்றுத் தர வேண்டும்.
நான் பல காலமாக பல அரச அதிகாரிகளிடம் எனது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு கடற்படையினரிடம் இருந்து எனது காணியை விடுவித்து தருமாறு பல தடவைகள் கோரிக்கை முன்வைத்தேன் எதுவும் நடந்ததில்லை.
எனது பூர்வீக நிலத்தை கடற்படையினருக்கு கொடுப்பதற்கு தயார் இல்லை எனது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு யாழ் வரும் ஜனாதிபதி எனது காணியை எனக்கே பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |