திடீரென துல்லியமாக அடையாளப்படுத்தப்படும் ஜனாதிபதி - பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள்
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச தலைமைகளின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளினதும் உண்மையான அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான சிறப்பு அறிவுறுத்தல்களை சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கியுள்ளார்.
அரச தலைமைகளின் பாதுகாப்பிற்காகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளின் உண்மையான அடையாளத்தை முன்கூட்டியே சரிபார்க்கும் அமைப்பை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம் என கூறப்படுகிறது.
அதிகாரிகளின் தகவல்கள்
அதன்படி, பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது சீருடையில் உள்ள நபர்களின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டியது கட்டாயம் என்று காவல்துறை மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், பாதுகாப்பு பணிகள், போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட எந்தவொரு சேவையிலும் ஈடுபடும் அதிகாரிகளின் தகவல்கள் துல்லியமாக சரிபார்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு நிகழ்வுகளின் போது பாதுகாப்பு பிரிவுகளை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் வண்ணமயமான மணிக்கட்டு பட்டைகள், பெல்ட்கள், பேட்ஜ்கள் அல்லது பிற சின்னங்களை வழங்கும்போது அதிக விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுதப்படைகள்
இதன்மூலம், ஆயுதப்படைகள் அல்லது காவல்துறையின் சீருடைகளை ஒத்த ஆடைகளை அணிவதன் மூலம் குற்றங்களைச் செய்யும் அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றத்தில் ஒருவரை போலி சட்டத்தரணி ஒருவர் சுட்டுக் கொன்றது போன்ற சம்பவங்கள் சமீபத்தில் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க தூண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகளைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு அதிகாரியின் தனிப்பட்ட கவனத்தையும் செலுத்த வேண்டும் என்றும், ஐஜிபி பிரியந்த வீரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
