தீர்க்கமான முடிவை தமிழ் மக்கள் எடுக்க வேண்டும்: சுமந்திரன் அறைகூவல்
நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தமிழர்களுடைய வாக்குகளை தீர்மானம்மிக்க வாக்குகளாக மாற்றியமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.
மக்கள் மன்றில் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும்” எனும் தலைப்பில் அறிவோர் ஒன்றுகூடும் அரசியல் கருத்துக் கள நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,“2005 இல் இடம்பெற்ற தேர்தலில் வாக்குகளை புறக்கணித்திருந்த நிலையில் அதன் விளைவுகளை சந்தித்திருந்தோம்.
தமிழர்களுடைய வாக்குகள்
ஆகையினால் இந்த வாக்கை பிரயோசனமான முறையிலே நாங்கள் ஒரு ஜனநாயக சூழலிலே மற்றவர்கள் மூன்றாகப் பிரிந்து இருக்கிற போது நாங்கள் தீர்மானிக்கிற சக்தியாக எங்களுடைய வாக்கை திரட்ட முடியும் என்றால் அது எங்களுக்கு மிகவும் பலமானதாக இருக்கும்.
அதை நாங்கள் செய்வது நல்லது என்ற என்னுடைய கருத்தை சொல்லி வைக்கிறேன். இப்படியாக இதுபோன்ற கருத்துக்கள் வெளிப்படுத்தும் கலந்துரையாடல்களை பல இடங்களிலும் நடத்தப்பட வேண்டும். தற்போது வவுனியாவிலும் மன்னாரிலும் கிழக்கு மாகாணத்திலும் இருந்து நடத்த வேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கின்றது.
என்னைப் பொறுத்தவரையில் இப்படியாக பேசுவது நல்லது. இந்த விடயங்களை பகிரங்கமாக மக்களோடு சேர்ந்து பேசுவது நல்லது என்பதுடன் மிகவும் ஆரோக்கியமானது. அதை தவிர்க்கிறவர்கள் தவிர்க்கலாம்.
அதிபர் தேர்தல்
ஆனால் மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்று இன்று திரளாக வந்த உங்களுடைய வருகை எங்களுக்கு எடுத்துக்காட்டி இருக்கின்றது. இந்நிலையில் 2010ஆம் ஆண்டு தேர்தலில் எங்களுடைய மக்கள் 3 இலட்சம் பேருக்கு அண்மித்ததாக முட்கம்பி வேலிகளுக்குள் இருக்கிற பொழுது கூட வாக்களித்தார்கள்.
அதன் பின்னர் மூன்று மாதங்களில் பிறகு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எங்களுக்கு கிடைத்த வாக்கைவிட போரில் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவிற்கு இரண்டு மடங்கு வாக்குகள் கொடுத்தார்கள்.
அடுத்த தடவை நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்து மைத்திரிபால சிறிசேனாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று சொன்னபோது எங்களுடைய மக்கள் வாக்களித்தார்கள். இந்த இடத்தில் மைத்திரிக்கு வாக்களித்து அதனால் என்ன நடந்தது என்று சிலர் கேட்கின்றார்கள். ஆனால் அதில் ஆனது என்னவென்று எங்களில் பலருக்கு தெரியும்.
காணி விடுவிப்பு
ஆனால் முடிவு ஒன்றும் பெறவில்லை என்பதை தவிர நடந்த பல விஷயங்கள் பலருக்கு தெரியும். இதில் விசேஷமாக எங்களுடைய நிலங்கள் விடுவிக்கப்பட்டது ஒரு பெரிய விஷயம். அந்த காலகட்டத்தில் எங்கெங்கு எவ்வளவு விடுவிக்கப்பட்டது என்ற புள்ளி விவரங்கள் இருக்கின்றன அதனைச் சொல்லி நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை .
குறித்த காலகட்டத்தில் தான் எங்களுடைய பல நிலங்கள் விடுவிக்கப்பட்டது. அது எங்களுடைய இருப்புக்கு அத்தியாவசியமானது. எங்களுடைய சுயநிர்ணய உரிமை என்று நாங்கள் சொல்லுவதற்கு அடிப்படையானது.
அப்படி காணி விடுவிப்பு பெரியளவில் நடந்தது. அதேபோன்று ஒரு புதிய அரசியலமைப்புக்கான முயற்சியும் நடந்தது. ஆனால் அது நிறைவு பெறவில்லை. இந்நிலையில், அடுத்த தேர்தலில் மக்கள் தாங்கள் தீர்மானமாக வாக்குகளை அளித்திருந்தார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |