ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: தடுப்புக்காவலில் இருக்கும் நாமல் ராஜபக்ச
நாட்டின் பெரும்பான்மையினமான பௌத்தர்களை அவமதித்துவிட்டு, ஏனைய இனத்தவர்களுக்கு தாம் இனவாதிகள் அல்லர் என்பதை வெளிப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பது முற்றிலும் தவறான செயலாகும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனவே, தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு, ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்றும், பௌத்த பிக்குகளை அவமதிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு
இதன்போது மேலும் உரையாற்றிய நாமல் ராஜபக்ச, எக்னெலிகொட வழக்கு விவகாரம் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்காகவே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அவருக்கு முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் அரசாங்கம் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் தவறு காணப்பட்டிருந்தால், அந்தத் தவறைத் திருத்திக்கொண்டு தற்போதைய ஜனாதிபதி ஏன் அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்க முடியாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்த அவர், நாட்டின் பெரும்பான்மையினமான பௌத்தர்களை அவமதித்துவிட்டு, தாம் இனவாதிகள் அல்லர் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் முயற்சியின் ஊடாக அரசாங்கமே இனவாதத்தைத் தூண்டுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், மகா சங்கத்தினருக்கும் பௌத்த பிக்குகளுக்கும் எதிராகத் திட்டமிட்ட வகையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அவர்கள் அவமதிக்கப்படுவதாகவும், மகா சங்கத்தினரின் ஆலோசனைகளுக்கு முரணாகவே அரசாங்கம் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |