சிறுவர்கள் போதைப்பொருள் பாவணை, வேலைக்கு அமர்த்துதல் - அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை!
சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவணையை தடுப்பது மற்றும் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை தடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பணிப்புரையை நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க விடுத்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் குறித்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு
மேலும்,
இது தொடர்பான விடயங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒழுங்கை செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுவர்கள் மத்தியில் ஊடுருவப்படும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும், இதற்காக தற்போது போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் 43 பாடசாலைகளில் முன்னெடுக்கப்படுவதாக எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில், இ.தொ.கா தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.