சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் மசகு எண்ணெயின் விலை: பாதிப்படையும் நிலையில் இலங்கை
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் உயர்வடைந்து வருகிறது.
இதன்படி, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 95 அமெரிக்க டொலர்களாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2022) ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்குப் பின்னரே இந்த விலை அதிகூடிய விலையாக மதிப்பிடப்பட்டிருந்தது.
சர்வதேச ரீதியில்
மசகு எண்ணெய் உற்பத்தியில் முன்னணியிலுள்ள சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் மசகு எண்ணெய்க்கான உற்பத்தி குறைவடைந்தமை உள்ளிட்ட பல காரணிகளே சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது சர்வதேச ரீதியில் மக்களிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஐரோப்பிய, அமேரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் இந்த விலை அதிகரிப்பானது, பணவீக்கத்தினையும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிக்கும் மத்திய வங்கிகளுக்கு மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், வட்டி வீதத்தை மேலும் அதிகரிப்பதற்கான அழுத்தத்தினை அதிகரிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் மற்றும் சேவைகள்
இந்த விலையுயர்வின் பின்னணியில் எதிர்வரும் நாட்களில் இலங்கையிலும் எரிபொருளின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக கூறப்படுகிறது.
எரிபொருட்களின் விலை அதிகரிப்பு அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளையும் அதிகரிப்பதில் செல்வாக்குச் செலுத்தும் என்று குறிப்பிடப்படுகிறது.