தமிழ் அரசியல் கைதிகளை யாழ். சிறைக்கு மாற்றுவதில் சிக்கல்
பாதுகாப்புக் காரணங்களுக்காக அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ். சிறைக்கு மாற்ற முடியாது என்கிறார் நீதி அமைச்சர் அலி சப்ரி.
சிறைச்சாலைகளின் மறுசீரமைப்பு தொடர்பான தனிநபர் ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்று இன்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரினால் முன்வைக்கப்பட்டது.
இப்பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், தற்போது அனுராதபுரம் சிறையில் இருக்கின்ற அரசியல் கைதிகள் தங்களை யாழ்ப்பாண சிறைக்கு மாற்றுமாறு கோருவதாகவும், அந்தக் கோரிக்கையை ஏற்று அதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும், நீதி அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.
இதற்குப் பதிலளித்த நீதியமைச்சர் அலி சப்ரி, அவர்களை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றுவதில் பாதுகாப்பு சிக்கல் இருப்பதாக கூறினார்.