முன்னாள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மக்களிடத்தில்! காவல்துறைமா அதிபர் விசேட நடவடிக்கை
புதிய இணைப்பு
முப்படைகளின் ஆயுதங்கள், முன்னாள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் திருடப்பட்ட துப்பாக்கிகள் என்பன தற்போது நாட்டில் கணிசமான எண்ணிக்கையில் பாவனையில் இருப்பதாக காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய (Priyantha Weerasuriya) தெரிவித்துள்ளார்.
காவல்துறை தலைமையகத்தில் வைத்து புதிய காவல்துறை மா அதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றார்.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே காவல்துறை மா அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை
பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஆதரவு வழங்கிய, அரசியல்வாதிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
ஒழுக்கமான காவல்துறையை நிறுவுவதே தனது ஒரே நோக்கம் என்றும் அதனை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதாக பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
தனது கடமைகளின் போது காவல்துறையின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கையின் 37 ஆவது காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 61 ஈ (ஆ) பிரிவின்படி, அரசியலமைப்பு பேரவை இந்த நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி, இன்று (14) கொழும்பு (Colombo) 02 இல் அமைந்துள்ள காவல்துறை தலைமையகத்தில் காவல்துறை மா அதிபராக பொறுப்பேற்பார்.
முதலாவது காவல்துறை மா
தேசபந்து தென்னகோன் காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் குறித்த பதவிக்கு பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பரிந்துரை செய்திருந்தார்.
இந்நிலையில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியிருந்த அரசியலமைப்பு பேரவை இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இலங்கை காவல்துறை கான்ஸ்டபிள், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறை அத்தியட்சகர் ஆகிய மூன்று கட்டங்களையும் தாண்டி காவல்துறை மா அதிபர் பதவிக்கு தெரிவான முதலாவது காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
