திருகோணமலையில் சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றுவதில் முரண்பாடு
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலையில் சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட கட்டுமானங்களை முழுமையாக உடைத்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
குறித்த நடவடிக்கை, இன்று (04) கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு தோல்வியில் முடிந்துள்ளது.
பிரட்ரிக் கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயா வளாகத்திற்குள் அனுமதி பெறாது சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த உணவகக் கட்டிடம் மற்றும் மூன்று கொட்டில்களை அகற்றுவதற்காக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பு கடமையில் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் வருகை தந்திருந்த நிலையில் குறித்த விகாரையின் விகாராதிபதியினால் துறைமுக காவல் நிலையத்தில் உடைக்கும் நடவடிக்கைக்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு கால அவகாசமும் கோரப்பட்டிருந்தது.
ஒருவாரகாலம் அவகாசம்
அத்துடன், குறித்த கட்டுமானம் தொடர்பிலான வழக்கு ஒன்று ஏற்கனவே மாநகரசயினால் தொடரப்பட்டுள்ளதால் அது தொடர்பான தீர்ப்பு இதுவரை கிடைக்கப்பெறாத நிலையிலும் குறித்த சட்டவிரோத கட்டுமானத்தை முழுமையாக உடைக்கும் நடவடிக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த 3 கொட்டில்கள் அகற்றப்பட்டுள்ளன.

ஏற்கனவே இந்த இடத்தில் 127 சதுர அடியில் தற்காலிக கடை ஒன்றை அமைப்பதற்கு மட்டுமே தமது திணைக்களம் உரிமையாளருக்கு அனுமதி வழங்கி இருந்தது எனவும் ஆனால் அந்த அனுமதியை பயன்படுத்தி 405 சதுர அடி பரப்பளவு கொண்ட நிரந்தரக் கட்டிடம் மற்றும் மூன்று கூடுதல் குடிசைகள், நிரந்தர வேலி ஆகியவை அனுமதி பெறாது கட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதனை அகற்றுமாறு இதற்கு முன்னர் உரிய முறையில் உரிமையாளருக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டிருந்ததாகவும் இந்நிலையிலேயே இன்று (04) குறித்த அனுமதிக்கு மீறிய கட்டுமானத்தின் 3 கொட்டில்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் ஏனையவற்றை அகற்றுவதற்காக ஒருவாரகாலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உடைத்தல் கட்டளை
குறித்த சட்ட விரோத கட்டுமானத்தை அகற்றுமாறு 12.08.2025 அன்று கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்டு உடைத்தல் கட்டளை ஒட்டப்பட்டிருந்தது.

குறித்த அறிவித்தலில் அறிவித்தல் ஒட்டப்பட்ட நாளில் இருந்து 14 நாட்களுக்குள் இக்கடையை அமைத்தவர்கள் தாமாகவே இந்த நிர்மாணங்களை உடைத்து அகற்ற வேண்டும் எனவும் குறித்த காலக்கெடு முடிந்த பின்னரும் நிர்மாணங்கள் அகற்றப்படாத பட்சத்தில் கரையோர பாதுகாப்பு திணைக்களம் அவற்றை உடைத்து அகற்றும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே குறித்த கட்டுமானத்தை இன்று (04) உடைத்து அகற்றுவதற்காக அதிகாரிகள் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 




                                        
                                                                                                                        
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்