நாட்டின் அபிவிருத்திக்காக புதிய வேலைதிட்டம்: ரணில் எடுத்துரைப்பு
பல்கலைக்கழக கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய வணிக கற்கைகள் நிறுவகத்தின் (NSBM Green University) 2023 பட்டமளிப்பு விழாவில் இன்று (11) காலை கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதற்கு அறிவாற்றல் மிக்க மனித வளம் தேவை எனத் தெரிவித்த அதிபர், இலங்கையில் பல்கலைக்கழகத் துறை மற்றும் தொழில் பயிற்சித் துறைக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கல்விமுறை மறுசீரமைப்பு
மேலும், தொழிற்பயிற்சி கல்வித்துறையின் புதிய மாற்றத்திற்கு தனியார் துறையினரின் ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டின் முழு கல்விமுறையையும் மறுசீரமைப்பதற்கு தேவையான சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் என்றும் அதிபர் ரணில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் 176 மாணவர்கள் பட்டம் பெற்றதுடன், சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 6 பேர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து விருதுகளைப் பெற்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |