ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தால் கொழும்பில் பதற்றம்
புதிய இணைப்பு
இலங்கையில் உள்ள அரச பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர் மற்றும் ஆசிரியர்களால் இன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்ற தடையுத்தரவை மீறி, ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து அதிபர் செயலகத்திற்கு பேரணியாக செல்ல முற்பட்டதை தொடர்ந்து நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சம்பள பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சிறிலங்கா காவல்துறையினர் நீதிமன்ற தடையுத்தரவை வாசித்து காட்டியதையடுத்து, ஆர்பாட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினருக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக அதிபர் செயலகத்தை நோக்கி புறப்பட்டுள்ளனர். இதையடுத்து, லேக்ஹவுஸ் சுற்றுவட்டாரத்தில் வைத்து குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் நோக்கில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
சுகவீன விடுமுறை போராட்டத்தில் இன்று (26) குதித்துள்ள ஆசிரியர் சங்கத்தினர் இன்று பிற்பகல் கொழும்பில் நடத்தப்படவிருந்த போராட்டத்திற்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இன்று (26) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கொழும்பின் பிரதான வீதிகளுக்கு தடையை ஏற்படுத்த வேண்டாம் எனவும், நிதியமைச்சு, அதிபர் செயலகம், மத்திய வங்கி, அதிபர் மாளிகை ஆகியவற்றுக்குள் அத்துமீறி நுழையவும் தடை செய்யப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்டவர்கள்
ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், மஹிந்த ஜயசிங்க, அமில சந்தருவன், வாஸ் குணவர்தன, வணக்கத்திற்குரிய உலப்பனே சுமங்கல தேரர், மயூர சேனாநாயக்க, வணக்கத்துக்குரிய யல்வல பன்னசேகர தேரர், புஞ்சிஹெட்டி, மொஹான் பராக்கிரம வீரசிங்க மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றின் உத்தரவு
மேலும் பொறுப்பான ஒரு அரசு அதிகாரியுடன் சட்டபூர்வமாக பெற்ற அனுமதியின் அடிப்படையில் நுழைவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |