அம்பாறை துப்பாக்கிசூடு -உயிரிழந்த காவல்துறையினர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
அம்பாறை திருக்கோவில் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் (24) காவல்துறை சார்ஜன்ட் ஒருவரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி கொல்லப்பட்ட 4 காவல்துறை அதிகாரிகளும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த ஒலுவிலைச் சேர்ந்த கே.எல்.எம். அப்துல் காதர், பாண்டிருப்பைச் சேர்ந்த அழகரெத்தினம் நவீனன், பிபிலையைச் சேர்ந்த டி.பி.கே.பி. குணசேகர, சியம்பலாண்டுவவைச் சேர்ந்த டி.எம்.டி.எச். புஷ்பகுமார ஆகிய 4 காவல்துறையினருக்குமே இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கே.எல்.எம். அப்துல் காதர் - சார்ஜன்ட் நிலையிலிருந்து உப காவல் பரிசோதகர் ஆகவும் அழகரெத்தினம் நவீனன் - கான்ஸ்டபிள் நிலையிலிருந்து சார்ஜன்ட் ஆகவும் டி.பி.கே.பி. குணசேகர - கான்ஸ்டபிள் நிலையிலிருந்து சார்ஜன்ட் ஆகவும் டி.எம்.ரி.எச். புஷ்பகுமார - கான்ஸ்டபிள் சாரதி நிலையிலிருந்து சார்ஜன்ட் சாரதி ஆகவும் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த திருக்கோவில் காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெஹிகம உட்பட இரு காவல்துறையினர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் கைதான சார்ஜன்டிற்கு ஜனவரி 06ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த 4 காவல்துறைஅதிகாரிகளினதும் வீடுகளுக்கு காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன இன்று (26) விஜயம் செய்ததோடு, அவர்களது குடும்பத்தினருக்கு இலங்கை காவல் திணைக்களம் சார்பில் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.