எதிர்காலத்தில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு: வெளியானது அறிவிப்பு
எதிர்காலத்தில் அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் விகிதாசார அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், விசேட பாதுகாப்பிற்கு தகுதியான ஜனாதிபதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்தார்.
இன்று (06) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பாதுகாப்பு
“தற்போது முன்னாள் ஜனாதிபதிகள், குறிப்பாக சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் (chandrika kumaratunga)பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படுவதாகக் கூறியிருந்தார்கள். அப்படி எந்த நீக்கமும் செய்யப்படவில்லை. தனக்கான பாதுகாப்பு படையினரை 30 ஆக குறைப்பதாக கடிதம் அனுப்பியிருந்தார். அது தவறு. இதுவரை 57 பேரை கொடுத்துள்ளோம்.
அனைத்து 4-5 முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக 100 க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் இராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளனர். சிலருக்கு 180 இருக்கும். பாதுகாவலர்கள் மட்டுமல்லாது பாதுகாப்பு வாகனங்கள், பேருந்துகள், டிஃபென்டர்கள், முச்சக்கரவண்டிகள், துவிச்சக்கரவண்டிகள், அம்புலன்ஸ்கள் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கான பாதுகாப்புக்கான செலவு
அவர்களுக்கான பாதுகாப்புக்கான செலவு தொடர்பில் நாம் கணக்கிட்டபோது,காவல்துறை பாதுகாப்பு மற்றும் இதர பராமரிப்பு செலவுகளை வழங்குவதற்கு சுமார் 1,100 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.
இதை மாற்ற வேண்டும். அதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைச்சரவைப் பத்திரமும் எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படும்.
அந்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, முன்னாள் ஜனாதிபதிகள் அனைவருக்கும் விகிதாசார முறையில் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்படும். விசேட பாதுகாப்பு தேவைப்படுபவர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. " என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |