சந்திரிக்காவின் பாதுகாப்பு குறித்த சர்ச்சை - அநுர அரசின் அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் (Chandrika Kumaratunga) பாதுகாப்பு நீக்கப்படவில்லை அல்லது குறைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Harath) தெரிவித்துள்ளார்.
தற்போது வரையில் 57 பாதுகாப்பு அதிகாரிகள் அவரின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அவருக்கான பாதுகாப்பு 30 பேர் வரையில் குறைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
கொலை செய்ய சதித்திட்டங்கள்
இதேவேளை, தனது கணவரான விஜய குமாரதுங்கவை அரசியல் காரணங்களுக்காக கொலை செய்தது போல், தன்னையும் கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (Chandrika Kumaratunga) சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு (Ravi Seneviratne) எழுதியுள்ள கடிதத்திலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கடிதத்தில், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ஹேமசிறி, ஒக்டோபர் 31 ஆம் திகதி வெளியிடப்பட்ட கடிதத்தில் தனது பாதுகாப்புப் படையின் எண்ணிக்கையை 50 இல் இருந்து 30 ஆக குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தாம் தான் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர் எனவும், கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி தாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |