மன்னாரில் காற்றாலை விவகாரம்: கொழும்பில் வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்
கொழும்பில் (Colombo) மன்னார் (Mannar) காற்றாலை திட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டமொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டம் நாளை (19) இடம்பெறவுள்ளது.
குறித்த விடயத்தை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
கனிய மணல்
மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்றைய தினம் (18) 47 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் நாளைய தினம் (19) கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் மாலை இரண்டு மணி அளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.
நூற்றுக்கணக்கான மக்கள்
மன்னார் மாவட்டத்தில் இருந்து பல நூற்றுக்கணக்கான மக்கள் தமது கிராமங்களில் இருந்து கலந்து கொள்ள உள்ளனர், அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 47 நாட்களாக மன்னாரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்து இருப்பினும், அரசாங்கத்தால் இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் குறித்த கோரிக்கைகளை முன் வைத்து நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம் இடம்பெற உள்ளது.
மனித உரிமைகள்
குறித்த போராட்டத்தில் தென் பகுதியில் உள்ள சிங்கள சகோதரர்களும் மற்றும் மத தலைவர்களும் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.
எனவே குறித்த போராட்டத்தில் புத்திஜீவிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் இணைந்து ஆதரவை வழங்க முன்வந்துள்ளனர்.
தேசத்தின் குரலாக நாளைய தினம் வெள்ளிக்கிழமை (19) மாலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன் எமது குரல் ஒலிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
