யாழ். மந்திரிமனைக்கு முன்பாக வெடித்த போராட்டம்
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் - நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனையை பாதுகாக்குமாறு கோரி முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
தமிழர்களின் தொன்மையினை எடுத்தியம்பும் நல்லூர் இராசதானியின் மந்திரிமனையினைப் பாதுகாத்து மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி இன்றையதினம் மந்திரிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
மந்திரிமனையானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக உடைந்து விழுந்துள்ள நிலையில் அதனை பாதுகாக்குமாறு கோரியே இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "இலங்கை அரசே தமிழர்களின் மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடு“, “இந்த இடத்தை உரிமை கோருபவரே மந்திரி மனையை இடித்துவிட்டு உல்லாச விடுதியா கட்டப்போகின்றீர்கள்“, “தொல்லியல் திணைக்களமே பௌத்த சின்னங்களை பாதுகாப்பதுபோல் தமிழரின் மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடு“, “மன்னன் சொத்து மக்கள் சொத்து தனிநபரே உரிமை கொண்டாடாதீர்கள்" போன்ற வாசகங்களை எழுதிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தின் (Jaffna) மரபுரிமை சின்னமான மந்திரிமனையை பாதுகாக்கவும் அதனை புனரமைக்க அனுமதிக்குமாறும் வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
நல்லூரில் அமைந்துள்ள மந்திரி மனையின் முன்பாக இன்று திங்கட்கிழமை காலை 8 மணிக்கு இந்தப் போராட்டம் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
அண்மையில் பெய்த மழையால் மந்திரி மனையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
தனிநபர் தடை
இந்த நிலையில் அந்த காணியின் உரிமையாளர் அதனை புனரமைக்க தடையாக செயல்பட்டு வருகிறார் என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அந்தவகையில், சங்கிலிய மன்னனது மந்திரிமனையை கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை என்றும் மந்திரிமனையை புனரமைக்க தாம் முயற்சித்த போதிலும் அதற்கு தனிநபர் தடையாக உள்ளதாக தொல்லியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனையை புனர்நிர்மாணம் செய்வதற்கு குறித்த காணியின் உரிமையாளரே தடையாக இருந்தார் என முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
