அரிசி விலையை குறைக்க கோரி வவுனியாவில் போராட்டத்தில் மக்கள்....!
அத்தியாவசிய பொருட்களின் விலையினை மக்களின் வாழ்க்கைச் செலவுகளிற்கு ஏற்றாற்போல் விலைக் குறைப்பை முன்னெடுக்கக் கோரி வவுனியா இராசேந்திரங்குளத்தில் இன்று (09) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது, "விவசாயிகளுக்கு இலவச திட்டங்களை வழங்கு, பட்டினிச்சாவு எதிர்காலத்தில் வேண்டாம், மூன்று வேளை உணவு எமக்கு வேண்டும்" போன்ற பல்வேறு பதாதைகளைத் தாங்கியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது மக்கள் போராட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,
அடிப்படை உணவு
"ஒட்டுமொத்த இலங்கை மக்களின் அடிப்படை உணவு அரிசிச் சோறு ஆகும். அந்த வகையில் தற்காலத்தில் எமது இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் பொருட்களின் விலையேற்றமும் கிராம மட்டங்களிலுள்ள வறிய மற்றும் நடுத்தர குடும்பங்களிலுள்ள பெண்கள் மற்றும் பிள்ளைகள் மத்தியில் பாரிய உணவுப் தட்டுப்பாடு மட்டுமல்லாது போசாக்கு குறைபாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது.
பல மக்கள் தங்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ள நிலையில் காணப்படுகின்றனர். குறிப்பாக இலங்கையில் கடந்த காலங்களிலும் தற்போதும் ஏற்பட்டுள்ள அரிசியின் விலையேற்றம் என்பது நாளாந்தம் தினக்கூலி வேலை செய்யும் குடும்பங்களுக்கும், கூடுதலான அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கும் மூன்று வேளையும் உணவு உண்பதற்குப் பதிலாக ஒன்று அல்லது இரண்டு வேளைகளில் மட்டுமே உணவிணை பெற்றுக்கொள்ள கூடிய நிலையினை உருவாக்கியுள்ளது.
சில குடும்பங்களில் சோறு இல்லாமல் கஞ்சி காய்ச்சி குடித்துக்கொண்டும் இருக்கின்றனர். பெண் தலைமை தாங்கும் குடுமபங்களை இந்த அரிசியின் விலையேற்றம் இன்னும் பட்டினிக்கு தள்ளியுள்ளது.
அத்துடன் தொடர்ச்சியாக நாட்டில் ஏற்பட்ட யுத்தம்,கொரோனா நோய்த் தாக்கம், வெள்ளம், வறட்சி மற்றும் தற்கால பொருளாதார நெருக்கடி அடிநிலையிலுள்ள வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தின் உணவுத் தேவையில் அதிக தாக்கத்தை செலுத்தியுள்ளது.
போசாக்கற்ற உணவு
சிறுவர்கள் கர்ப்பிணித் தாய்மார்கள் பெண்கள் அனைவரும் தமது பசியினைப் போக்குவதற்காக போசாக்கற்ற உணவுகளை உண்ண வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
முதியோர்கள், தொழிலிழந்த ஆண்கள், வறுமைப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் என பல தரப்பினரும் உணவுக்காக வீதிகளில் கையேந்துவதை இலங்கை முழுவதும் காணக்கூடியதாகவுள்ளது." என குறிப்பிட்டுள்ளனர்.
தவிரவும், இலங்கை அரசு மக்களின் வேண்டுகோளையும் பசியின் கொடூர நிலையையும் கவனத்தில் கொண்டு இலங்கையில் அரிசியின் விலையை நூறு ரூபாய்க்கு கீழ் உடனடியாக கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். மக்களின் வறுமை நிலையை போக்கி மக்கள் மூன்று வேளையும் பசியின்றி சோறு உண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்த்துள்ளனர்.
இலங்கை அரசு மக்களின் சோற்றில் கைவைக்காமல் அரிசியின் விலையை 100 ரூபாய்க்கு கீழ் குறைத்து மக்களின் பட்டினிச் சாவை தவிர்த்து மக்களின் பொருளாதார சுமையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |