கல்முனையில் கறுப்பு சித்திரை போராட்டம்!
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக ரீதியான பிரச்சினைகளை வென்றெடுப்பதற்கான போராட்டம் இன்று 21 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது “கறுப்பு சித்திரை” எனும் தொனிப்பொருளில் இன்று(14) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சைக்கிள் பவணி
இதன் போது, மோட்டார் சைக்கிள் பவணி ஒன்று இளைஞர் கழகங்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு பிரதேச செயலக முன்றலில் இருந்து மணல்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, துரைவந்தியன் மேடு, துறைநீலாவணை பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு கல்முனை நகரப்பகுதி ஊடாக சென்று மீண்டும் பிரதேச செயலக முன்றல் நோக்கி வந்தடைந்ததுடன், பல்வேறு கோஷங்களுடன் குறித்த பவணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முற்பகல் பிரதேச செயலகத்தின் முன்பாக கறுப்பு பொங்கல் பொங்கப்பட்டுள்ளது.
பதற்றம்
இந்நிலையில், அங்கு வருகை தந்த கல்முனை தலைமையக காவல்துறையினர் நீதிமன்ற கட்டளைப்படி பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் பொதுச்சொத்துக்கள் சேதமாக்குதல் போன்ற செயற்பாடுகளுக்காக போராட்டக்காரர்கள் என மூவரின் பெயரை குறிப்பிட்டு அப்பகுதியில் கடிதம் ஒன்றினை வழங்கியுள்ளனர்.
இதனால் அங்கு சிறு பதற்றம் எற்பட்டதோடு பின்னர் பிரதேச செயலகம் மீது திணிக்கப்படும் நிர்வாக அடக்கு முறைக்கும் அத்துமீறல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், இன்று கறுப்பு சித்திரையாக பிரகடனப்படுத்தப்பட்டதாகவும் பிரதேச செயலகத்திற்கான நிர்வாக உரிமையை வென்றெடுக்க அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |