கடற்றொழிலாளர் அமைப்புகள் துண்டுப்பிரசுர விநியோகம்...! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
கடற்றொழில் துறைமுகங்களில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜன அரகல இயக்கம் மற்றும் வசந்த முதலிகே உள்ளிட்ட கடற்றொழிலாளர்கள் அமைப்புகள் இணைந்து இந்நடவடிக்கையை நேற்றைய தினம் (21-10-2026) முன்னெடுத்துள்ளனர்.
தலைமுறை தலைமுறையாக கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு எந்தவொரு அரசாங்கமும் தீர்வை வழங்கவில்லை என்றும், கடற்றொழாளர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாகவும் இவ்வமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
எரிபொருள் மானியம்
கடற்றொழிலுக்கான எரிபொருள் மானியம் வழக்கம் போல் சாதாரண சந்தை விலையிலேயே விற்பனை செய்யப்படுவதால் கடற்றொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடற்றொழில் வலைகள் மற்றும் உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அதிக வரிகள் காரணமாக அவற்றின் விலைகள் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் கடல்வளத்தைச் சூறையாடும் இந்தியப் படகுகளின் அத்துமீறல்களைத் தடுக்க தற்போதைய அரசாங்கமும் முறையான அறிவியல் பூர்வமான திட்டங்களைச் செயல்படுத்தத் தவறிவிட்டது எனவும் துண்டுப்பிரசுரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெருங்கடலை நிறுவனங்களுக்குப் பிரித்துக் கொடுத்து கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் புதிய கடற்றொழில் சட்டமூலத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நியாயமான மீன் விலை, எரிபொருள் நிவாரணம், தரமான உபகரணங்கள் மற்றும் கடல் வளப் பாதுகாப்பை உறுதி செய்ய கடற்றொழில் சமூகம் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் எனவும் இவ்வமைப்புகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


