திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட மது ஒழிப்பு போராட்டம்
திருகோணமலை (Trincomalee) - மூதூர், இருதயபுரம் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை மூடுமாறு வலியுறுத்தி இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தை இன்று (18) பிரதேசத்திலுள்ள சகல அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இருதயபுரம் மகா வித்தியாலயத்திற்கு முன்னாள் பாடசாலையை மூடி நுழைவாயிலுக்கு முன்னாள் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் பங்குபற்றியிருந்ததுடன், இதனால் பாடசாலை செயற்பாடுகள் சுமார் ஒரு மணிநேரம் தடைபட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
தூரத்தில் பாடசாலைகள்
அதன் பின் பாடசாலையிலிருந்து இருதயபுரம் மதுபானசாலை நோக்கி நடைபவணியாகச் சென்ற பொதுமக்கள் குறித்த மதுபான சாலைக்கு முன்னால் சென்று கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் மூதூர் நகருக்குச் சென்று மணிக்கூட்டு கோபுரச் சந்தியிலிருந்து, மூதூர் பிரதேச செயலகத்திற்குச் சென்று பிரதேச செயலகத்திற்கு முன்னால் நின்றும் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டோர் கருத்து தெரிவிக்கும் போது, “குறித்த மதுபான சாலைக்கு குறிப்பிட்ட தூரத்தில் பாடசாலைகள், மதஸ்தலங்கள் காணப்படுகின்றன. அத்தோடு அப்பகுதியில் உள்ள அதிகமான பொதுமக்கள் கூலி தொழிலை நம்பி வாழ்கின்றவர்கள்.
அரச அதிகாரிகள்
இந்த மதுபான சாலை திறக்கப்பட்டமையினால் பல்வேறு பிரச்சினைகள் இடம் பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த மதுபான சாலை திறப்புக்கு பல்வேறு வகையிலும் பொதுமக்கள் பல்வேறு எதிர்ப்புக்களை காட்டிய போதிலும் மதுபான சாலையானது அரசியல்வாதிகளினதும், அரச அதிகாரிகளினதும் ஆதரவுகளுடனே திறக்கப்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக இம்மதுபான சாலையை மூடுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதேச செயலாளர்
அந்தகையில், தற்காலிகமாக மதுபான சாலை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகும், அதிகாரிகளிடம் இது விடயம் தொடர்பாக பேசுவதாகவும் பிரதேச செயலாளர் வாக்குறுதி வழங்கியதை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.
மேலும், இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பேதங்களைக் கடந்து மூவின மக்களும் கலந்து கொண்டதோடு, சர்வ மத தலைவர்களும் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |