கொழும்பில் முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டம் : நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு
கொழும்பில் பொல்துவ சுற்றுவட்டத்திலிருந்து நாடாளுமன்ற வீதி வரை இன்று (24) நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவினரால் குறித்த போராட்டம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் போக்குவரத்திற்கு ஏற்பாடும் நெருக்கடிகளை தவிர்க்கும் வகையிலும் வெலிக்கடை காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவுக்கு அமைய இந்த உத்தரவு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
கடமைகளுக்கு இடையூறுகள்
இதன்படி, போராட்டக்காரர்கள் எந்தவொரு வீதியையும் மறித்து வீதியை பயன்படுத்துவோருக்கு இடையூறுகளை ஏற்படுத்தவோ அல்லது வன்முறையில் ஈடுபடவோ கூடாது எனவும், நாடாளுமன்ற விதிமுறைகளை மீறாத வகையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மக்கள் பிரதிநிதிகளின் சிறப்புரிமைகள் மற்றும் கடமையில் இருக்கும் அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தல் கூடாதென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறினால், அமைதியை நிலைநாட்ட காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |