இஸ்ரேலில் புதிய அரசாங்கத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
இஸ்ரேலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பென்ஜமின் நெட்டன்யாஹு தலைமையிலான தீவிர வலதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரைப் பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவது மற்றும் நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கான அதிகாரத்தை குறைப்பது உள்ளிட்ட அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
திருமறையின் பேரழிவு
இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹு தலைமையிலான தீவிர வலதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள், திருமறையின் பேரழிவு என எழுதப்பட்ட வாசங்களை கைகளில் ஏந்தியிருந்தனர்.
புதிய அரசாங்கம் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பதாக குற்றஞ்சாட்டி, ஹபிமா சதுக்கத்தில் மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் கடந்த 74 ஆண்டுகால வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் தீவிர வலதுசாரி மற்றும் மதரீதியிலான பழமைவாத அரசாங்கம் பதவியேற்று சில நாட்களில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சட்டவிரோத குடியேற்றங்களை விரிவுபடுத்துவது முதல் நீதித்துறையின் அதிகாரத்தை பலவீனப்படுத்துவது வரை பரந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள பென்ஜமின் நெட்டன்யாஹுவின் புதிய அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.
இனவெறிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது, பாசிசம் மற்றும் இனவெறிக்கு எதிராக ஒன்றுபடுவோம் உள்ளிட்ட வாசகங்களை ஏந்திய பதாகைகளுடன் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் இடதுசாரி கட்சியினர் மற்றும் பலஸ்தீன உறுப்பினர்களின் தலைமையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
