ஊரடங்கு மத்தியிலும் கிளர்ந்தெழுந்த மக்கள்(படங்கள்)
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இன்று மாலை இலங்கையின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
தற்போதைய அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தை தெரிவு செய்ய கடுமையாக உழைத்தவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
கொழும்பு குருநாகல் மற்றும் கட்டுநாயக்க, ஆகிய பகுதிகளில் இருந்து பயணித்த மக்களும் அப்பகுதியில் வாகன நெரிசலைக் குறைத்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவளித்தனர்.
மஹரகம மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எரிபொருள் விலை அதிகரிப்பு, மருந்து தட்டுப்பாடு, எரிவாயு நெருக்கடி, பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் மின்வெட்டு போன்றவற்றுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அம்பாறை விவசாயிகள் உகனவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உஹன குமரிகம, மல்வத்த திஸ்ஸபுர, சந்தனதபுர, சியம்பலாவெவ, மாயதுன்ன ததயம்தலாவ மற்றும் ஏனைய விவசாயக் குடியேற்றங்களைச் சேர்ந்த மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
மின்வெட்டால் கடைகள், சிறுதொழில்கள், போக்குவரத்து சேவைகள், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தை தேசிய மக்கள் படை ஏற்பாடு செய்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக எல்பிட்டிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இளைஞர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. தற்போதைய சூழ்நிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் குழு ஒன்று கூடியுள்ளதாகவும் அந்த இளைஞர்கள் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் போராட்டத்தை ஏற்பாடு செய்த இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.






