தமிழர்களின் கரி நாள்! புலம்பெயர்தேசங்களில் பேரெழுச்சி
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்ட கரிநாள் எதிர்ப்பு போராட்டங்களுக்கு சமாந்தரமாக இன்று புலம்பெயர்நாடுகளின் முக்கிய நகரங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
லண்டன் மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்களில் சிறிலங்கா தூதரகம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே ஒன்றுகூடிய மக்கள் தமது போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கெதிரான பதாதைகளை தாங்கியபடி கண்டனக் கொட்டொலிகளை எழுப்பியிருந்தனர்.
தூதரகத்தின் மாடியில் கட்டப்பட்டிருந்த சிறிலங்காவின் தேசியக்கொடிக்கு சமாந்தரமான உயரத்தில் நீண்ட கோல் ஒன்றில் தமிழர் தாயகத்தின் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டிருந்ததையும் இந்தப்போராட்டத்தில் அவதானிக்க முடிந்துள்ளது.
இதேபோலவே பாரிஸ் நகரிலும் சிறிலங்கா தூதரகம் அமைந்துள்ள இடத்துக்கு அருகே இன்று மாலை ஒன்று கூடிய மக்கள் ஒற்றையாட்சிக்கெதிராகவும் தமிழின அழிப்பிற்கான அனைத்துல விசாரணையை வலியுறுத்தியும் 13ஆம் திருத்தச் சட்டத்தை நிராகரித்தும் கொட்டொலிகளை எழுப்பியிருந்தனர்.
ஜேர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம் மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அதேவேளை கனடாவிலும் எதிர்ப்புப்போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
