யாழ். மாநகர சபையை முற்றுகையிட்டு வெடித்த போராட்டம்
யாழ். மாநகர சபை உறுப்பினர் தர்சானந்தின் பழக்கடைகளை அகற்றுவது தொடர்பில் கொண்டுவரப்படும் பிரேரணையை எதிர்த்து மாநகர சபையை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மத்திய பேருந்து நிலைய சூழலில் அமைந்துள்ள பழக்கடை வியாபாரிகள் இன்றையதினம் (13) குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன் மாநகர சபை உறுப்பினர் தர்சானந், ஒவ்வொரு மாதமும் குறளிவித்தை காட்டி தன்னை பிரபல்யப்படுத்த முயற்சிக்கும் சுயநினைவற்றவர் என்று யாழ். நகர பழக்கடை உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உரிய தீர்வு வேண்டும்
நீதிமன்றின் உத்தரவில் தமக்கு அன்றைய ஈ.பி.டி.யின் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவின் ஆட்சியில் வழங்கப்பட்ட கடைகளை காழ்புணர்ச்சியின் காரணமாகவே அகற்ற முயற்சிக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளனர்.

இங்கு கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், “நாம் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே போராடுகின்றோம். ஆனால் எமது நிலையை மாநகரின் உறுப்பினர் தர்சானந்த் உணரவில்லை. அவர் சுயநினைவின்றியே இருப்பதாக தோன்றுகின்றது.
அவரது இந்த பிரேரணையால் அவர் தனக்கு ஊடக விளம்பரத்தை தேடலாம். ஆனால் எமது வாழ்வியலை இழக்கச் செய்துதான் தனது விளம்பரத்தை தேடக்கூடாது. இவ்வாறான உறுப்பினரை தேர்ந்தெடுத்தது அப்பகுதி மக்களின் தவறாகவே நினைக்கின்றோம்.
எனவே எமக்கு உரிய தீர்வு தராது எமது கடைகளை அகற்றினால் நாம் குடும்பங்களுடன் மாநகரை முற்றுகையிட்டு போராடுவோம்” என்று தெரிவித்தனர்.

செய்திகள் - த.பிரதீபன், பு.கஜிந்தன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |