இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் கஜேந்திரகுமார் ஏற்றுக்கொண்ட முக்கிய விடயம்
புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் இழுபறிகளில் காலம் கடத்தப்படுகின்றதே தவிர, தேர்தல் வைப்பதற்கான எந்த உத்தேசமும் இருப்பதாகத் தெரியவில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், மாகாண சபைக்கான தேர்தல்களை நடாத்துவதற்கான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா கொடுக்க வேண்டும் என்று கோரியபொழுது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதனை ஏற்றுக்கொண்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
“தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், குறைந்தபட்சம் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவதனூடாக மாத்திரமே அரசியல் சாசனத்தில் இருக்கக்கூடிய அதிகாரங்களைக் கையிலெடுத்து, இயலக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களை வடக்கு-கிழக்கில் உருவாக்க முடியும்.
அரசியல் சாசனம் வருமா
அரசாங்கம் பதவிக்கு வந்து புதிய அரசியல் சாசனத்தைப் பற்றிப் பேசினாலும்கூட, அந்த அரசியல் சாசனம் வருமா? வராதா? அவ்வாறான அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரமான நிலைத்திருப்பதான தீர்வு எட்டப்படுமா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், தமிழ் மக்களுக்கு இன்று இருக்கக்கூடிய சட்டபூர்வமான பொறிமுறை என்பது மாகாணசபை மாத்திரமே.
ஆகவே, அந்த மாகாணசபை அதிகாரங்களைக் கையிலெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், அதற்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வலியுறுத்தியது மாத்திரமல்லாமல், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கககூடிய ரெலோ, புளொட், சமத்துவக் கட்சி, ஜனநாயகப் போராளிகளுடன் இணைந்து தேர்தலை வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு--கிழக்கின் பல மாவட்டங்களில் பிரச்சாரங்களையும் முன்னெடுத்து வருகின்றது.
இன்று தமிழரசுக் கட்சியும் இணைந்து தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்ற பொது விடயத்தில் ஒருமித்து செயற்பட ஆரம்பித்திருக்கின்றோம்.
அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஜெயசங்கர் அவர்களை தமிழ் கட்சிகள் சந்தித்த பொழுது, மாகாண சபைக்கான தேர்தல்களை நடாத்துவதற்கான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா கொடுக்க வேண்டும் என்று கோரியபொழுது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதனை ஏற்றுக்கொண்டார்.
மாகாணசபைத் தேர்தல்
ஆகவே மாகாணசபைத் தேர்தல்களை நடாத்த வேண்டும் என்பதில் சகல கட்சிகளும் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இதன் மூலம் இந்த விடயத்தில் நாங்கள் ஒன்றாகவே இருக்கின்றோம் என்பதை இந்தியாவிற்கும் தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.
தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு என்பது ஒற்றையாட்சிக்கு வெளியேதான் இருக்க முடியும் என்பதில் தமிழ் கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து நிலவுகிறது.
அது சமஷ்டியாகவோ, தேசங்களின் கூட்டாட்சியாகவோ அல்லது வேறுவிதமாகவோ அமையலாம்.
ஆகவே புதியதோர் அரசியல் சாசனமானது தமிழ் மக்களுக்கான எத்தகைய தீர்வை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதில் தமிழ்த்தரப்பு அனைத்தும் ஒருமித்த கருத்துக்கு வந்து அந்த விடயம் அரசிற்கு முன்மொழியப்பட வேண்டும்.
சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக ஜனாதிபதியாக இருந்தபொழுது, பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அடிப்படையில் ஒரு தீர்வு முன்மொழியப்பட்டு அது நாடாளுமன்றம் வரை வந்தது.
இதனைப் போலவே இன்னும் பல முன்மொழிவுகள் இருக்கின்றன. ஆகவே, தமிழ்க் கட்சிகள் ஒன்றுகூடி சரியான ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதே பொருத்தமானதாக இருக்கும்.
இதனை விடுத்து நான் மாத்திரமே சமஷ்டியைப் பற்றிப் பேசினேன் என்றும் மற்றவர்கள் வாய்மூடி இருந்தார்கள் என்றும் கூறுவது குறுகிய அரசியல் லாபம் கொண்டதாக இருக்குமே தவிர, அர்த்தபுஷ்டியான ஒரு தீர்வை நோக்கிச் செல்கின்ற வழிமுறையாக இருக்காது” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |