மாகாண சபை முறைமை நீக்கம் : இந்தியாவை மீறி எதுவும் செய்துவிட முடியாது : வடக்கிலிருந்து ஒலித்த குரல்கள்
இந்தியாவை மீறி மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்துவிட முடியாது என சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்யும் மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்த தேர்தலை விரைவாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
" வன் டெக்ஸ்ட்" நிறுவனத்தின் அனுசரணையில், கடந்த வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மாகாண சபையின் உறுப்பினர்கள் பங்கெடுப்புடன் மாகாண சபையின் கடந்த கால அனுபவம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்" தொடர்பிலான கருத்தரங்கு ஒன்று யாழ். ரில்கோ விடுதியில் இன்று (21-09-2025) நடைபெற்றது.
தேர்தல் பின்நோக்கிச் செல்வதற்கான ஏதுநிலைகள்
இதன்பின் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சர்வேஸ்வரன், தமிழரசுக் கட்சி சார்பில் ஆர்னோல்ட், ஈ.பி.டி.பி சார்பில் தவனாதன், புளொட் சார்பில் கஜதீபன், ரெலோ சார்பில் குகதாசன் ஆகியோர் இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது மேற்கண்டவாறு கூறிய அவர்கள் மேலும் கூறுகையில்,
குறித்த சந்திப்பு ஆக்கபூர்வமான சந்திப்பாக இருந்தது. இதன்போது முக்கிய விடையமாக தேர்தல் பின்நோக்கிச் செல்வதற்கான ஏதுநிலைகள் குறித்து அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த நிலையில் இருந்து ஆராயப்பட்டது.
குறிப்பாக அனைத்து கட்சிகளுக்கும் சம உரிமை வழங்கி அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் இன்றைய அரசு மாகாண சபை முறைமையை விரும்பாத ஒன்றாகவே இருக்கின்றது. கடந்த காலங்களில் இந்த அரசின் நிலைப்பாடு மாகாணசபை முறைமைக்கு எதிரானதாகவே இருந்தது.
அரசுக்கு நாடாளுமன்றில் கிடைக்கும் பெரும்பான்மை
குறிப்பாக தேர்தலை பழைய முறையிலா புதிய முறையிலா நடத்துவது என்ற விவாதத்தை கையிலெடுத்து அரசுகள் காலத்தை தாழ்த்தி வருகின்றன.
புதிய முறைமை என்றால் எல்லை நிர்ணய முறைமையில் ஏற்பட்ட குறைபாடு நீக்கப்பட்டால் அல்லது சீர் செய்யப்பட்டால் தான் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.
ஆனால் பழைய முற்றையில் நடத்துவதாயின் அது இலகுவானது. நாடளுமன்றில் அதற்கான அனுமதியை பெரும்பான்மையுடன் இந்த அரசு சுலபமாக பெறமுடியும்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் முழுமையான தீர்வாக மாகாணசபை முறைமை இல்லாதுவிடினும் அதுவே தீர்வின் ஆரம்பமாக இருக்கின்றது.
அதனால் தான் அரசுகள் தேர்தலை நடத்த அக்கறை காட்டுவதில்லை. அதையே இந்த அரசும் செய்கின்றது.
இதே நேரம் தமிழ் மக்களுக்கு இது அவர்களது இருப்புடன் தொடர்புடைய ஒன்று. ஆனால் ஏனைய மாகாணங்களுக்கு அது அவசியமற்றதாக இருக்கலாம்
வடக்கு கிழக்கிலாவது நடத்த வேண்டும்
தேர்தலை நடத்த அரசு விரும்பாவிட்டால் குறைந்த பட்சம் இதை வடக்கு கிழக்கிலாவது நடத்த வேண்டும். இதை அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்துகின்றன.
சர்வதேச சமூகம் எமது அரசியல் உரிமை குறித்து பேசுகின்றது. இந்திய அரசும் ஐ.நாவில் வலியுறுத்துகின்றது.
குறிப்பாக ஐ.நாவின் தற்காலிக வரைபில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது. இதனால் இவ்விடையம் தற்போது இது சர்வதேச குரலாக இருக்கின்றது.
இந்தியாவுடன் இலங்கை நேரடியாக மோதும்
அதனால் மகாணசபை முறைமை நீக்கப்படாது. நீக்கப்பட்டால் இந்தியாவுடன் இலங்கை நேரடியாக மோதும் ஒரு சம்பவமாக உருவாகிவிடும். அதனால் மாகணசபை முறைமையை நீக்க அரசு முயலாது.
அதே நேரம் புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு முழுமையாக கிடைக்குமாக இருந்தால் மட்டுமே மாகாணசபை முறைமையை இல்லாது செய்யும் சாத்தியம் ஏற்படும் என்றும் தெரிவித்திருந்த்மை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
