PSTA சட்டமூல திருத்தம் என்பது வெறும் டிங்கரிங் மட்டுமே: கடுமையாக சாடும் அலி சப்ரி
இலங்கையில் பெரும் அரசியல் மற்றும் சமூக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான சட்டம் ஆகிய புதிய சட்ட மூலங்களில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் திருத்தங்கள் வெறும் மேலோட்டமான டிங்கரிங் வேலைகள் மட்டுமே என முன்னாள் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்கள் மற்றும் உள்நாட்டு, சர்வதேச அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளுக்குப் பயந்து, புதிய சட்டமூலத்தில் உள்ள சில சர்ச்சைக்குரிய பிரிவுகளை அரசாங்கம் நீதிமன்றத்தின் மூலம் திடீரென மீட்டுக் கொண்டது எனவும் கூறியுள்ளார்.
சட்டத்தின் உண்மையான ஆபத்து
பச்சைக்குத்துதல் மற்றும், அடையாளங்களை வைத்து கைது செய்யும் அதிகாரம், கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் மற்றும் பாரிய குற்றங்கள் தொடர்பான விபரங்களை ஊடகங்களில் வெளியிடுவதற்கு முன்னர் நீதிமன்ற அனுமதியைப் பெற வேண்டும் என்ற பிரிவுகள் இதில் நீக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், இந்த மேலோட்டமான மாற்றங்கள் சட்டத்தின் அசல் நச்சுத்தன்மையையோ அல்லது அதன் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படவிருக்கும் பேராபத்தையோ தடுத்துவிடாது என விவாதத்தில் பங்கேற்ற ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் தற்போது நீதிமன்றக் கண்டனங்களுக்கு அஞ்சி சில சிறிய பிரிவுகளை மட்டும் நீக்கிவிட்டு, சட்ட மூலங்களை எப்படியாவது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பார்க்கிறது.
இது வாகனத்திற்குச் செய்யும் மேலோட்டமான ‘டிங்கரிங்’ வேலை போன்றதே தவிர, இதனால் சட்டத்தின் உண்மையான ஆபத்து நீங்காது என அவர் அலி சப்ரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒரு வருடம் வரை தடுத்து வைத்து விசாரணை
நீதிமன்ற உத்தரவு ஏதுமின்றி ஒரு நபரை இரண்டு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை தடுத்து வைத்து விசாரணை செய்யும் தன்னிச்சையான அதிகாரம் மற்றும் காவல்துறை காவலில் வைத்து சித்திரவதை செய்து பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சாட்சியமாகப் பயன்படுத்தும் மிருகத்தனமான பிரிவுகள் இன்னும் இந்தச் சட்டத்தில் அப்படியே நீடிப்பதாக அவரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய தெளிவற்ற, மனித உரிமை மீறல்களைக் கொண்ட சட்ட மூலங்களை அரசாங்கம் உடனடியாக முற்றாக மீளப்பெற வேண்டும்.
இல்லையெனில் இது எதிர்காலத்தில் அரசியல் எதிரிகளையும் சாதாரண பொதுமக்களையும் பழிவாங்கும் ஒரு ஆயுதமாக மாறும் என்றும் அலி சப்ரியால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |