பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகள் மீது சைபர் தாக்குதல்: ஈரான் மீது குற்றச்சாட்டு
பிரான்ஸ் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பல்பொருள் அங்காடிகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களின் வெப்பநிலையை மாற்றியமைத்து சைபர் தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக பிரான்ஸ் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நொவல் பாரோ (Jean-Noël Barrot) கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
இந்தத் தாக்குதல் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) கீழ் இயங்கும் சைபர் பிரிவு ஒன்றால் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
பல்பொருள் அங்காடி
கடந்த மாதம் பிரான்ஸில் உள்ள நூற்றுக்கணக்கான பல்பொருள் அங்காடிகளில் அமைந்துள்ள குளிரூட்டல் மென்பொருட்களைக் குறிவைத்து இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதன் காரணமாகக் குளிர்சாதனப் பெட்டிகளின் வெப்பநிலை திடீரென உயர்ந்து பல மில்லியன் யூரோ மதிப்பிலான உணவுப் பொருட்கள் வீணானதுடன் சில இடங்களில் தீ விபத்துகளும் ஏற்பட்டன.
பிரான்ஸைத் தொடர்ந்து பெல்ஜியம், லக்ஸம்பேர்க் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் இரத்தம் சேமிப்பு மையங்களின் குளிரூட்டல் அமைப்புகள் இதேபோன்று சைபர் தாக்குதலுக்கு உள்ளாகின.
ஈரானிய தரப்பு
இது குறித்து பாரிஸ் அரசு தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் சம்மந்தப்பட்ட சைபர் பிரிவின் தலைவர் மற்றும் இரண்டு முக்கிய உறுப்பினர்களைக் கைது செய்ய சர்வதேச பிடியாணைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய அளவில் ஈரானுக்கு எதிராகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாகவும் பிரான்ஸ் எச்சரித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றங்கள் நிலவி வரும் சூழலில் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஐரோப்பிய நாடுகள் மீது நடத்தப்படும் இத்தகைய சைபர் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஈரானிய தரப்பு இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் நிலையில் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |