எதிரிகளின் உள்கட்டமைப்பை முடக்கும் ஈரான்: சக்திவாய்ந்த தாக்குதலுக்கு ஆயத்தம்
ஈரானிய இராணுவம் இதுவரை பின்பற்றி வந்த தற்காப்பு அணுகுமுறையை மாற்றி தாக்குதல் கோட்பாடு நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இதற்கேற்பத் தங்களின் போர்மறைகள் மற்றும் ஆயுதப் அமைப்புகளை உருமாற்றிவருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈரானிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் முகமது அக்ரமினியா (Mohammad Akraminia) இதனை தெரிவித்துள்ளார்.
முக்கியக் கூறுகள்
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) பிறப்பித்துள்ள சமீபத்திய உத்தரவுகளே இராணுவத்தின் இந்த புதிய நகர்வுகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
“உச்ச தலைவரின் உத்தரவின் பேரில் இராணுவம் மூன்று முக்கியக் கூறுகளை முன்வைத்துச் செயல்படுகின்றது.
இதனடிப்படையில்,
- உடனடிப் பதிலடி (Urgency): எதிரிகளின் தாக்குதலுக்கு சற்றும் தாமதிக்காமல் உடனடியாகத் திருப்பித் தாக்குதல் நடத்துவது.
- திறம்பட்ட தாக்கம் (Effectiveness): எதிரியின் உள்கட்டமைப்பை முடக்கும் வகையில் சக்திவாய்ந்த சேதத்தை ஏற்படுத்துவது.
- புவியியல் எல்லையற்ற பதிலடி (Lack of geographical limitations): மத்திய கிழக்கு பிராந்தியம் மட்டுமின்றி எல்லைகளைக் கடந்து அமெரிக்க மற்றும் எதிரி நாடுகளின் அனைத்து இலக்குகளையும் தாக்கும் வகையில் வரம்புகளை நீக்குவது.
ஈரான் இராணுவம் இதுவரை எதிரிகளின் முதற்கட்டத் தாக்குதலைத் தடுத்து பின்னர் பிராந்திய எல்லைக்குள்ளேயே தற்காப்புப் பதிலடி கொடுக்கும் பழிவாங்கும் தடுப்பு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வந்தது.
ஈரானின் தாக்குதல்
இருப்பினும் தற்போதைய சூழலில் அது தாக்குதல் அணுகுமுறையாக மாற்றப்பட்டு வருகிறது.
அண்மையில் நடைபெற்று முடிந்த அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான மீண்டும் ஒரு போர் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறையக்கூடும் எனக் கூறப்பட்டாலும் ஈரானின் இராணுவத் திறன் மேம்பாடு மற்றும் தாக்குதல் தயார்நிலைப் பணிகள் எந்தவொரு வெளிப்புற அரசியல் மாற்றங்களுக்கும் தடையின்றித் தொடர்ந்து சுயாதீனமாகவே முன்னெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

ஈரானின் புதிய தலைமை மற்றும் இராணுவத்தின் இந்தத் தாக்குதல் கோட்பாடு பற்றிய அறிவிப்பானது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் தீவிர பாதுகாப்புப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ஈரானின் இந்த இராணுவ நகர்வுகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |