ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூல விசாரணை: ஜனாதிபதிக்கு அனுப்பப்படவுள்ள இரகசிய தீர்மானம்
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான விசாரணைகளை உயர்நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.
இது தொடர்பான இரகசியத் தீர்மானம் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும் என உயர்நீதிமன்றம் இன்று (09.11.2026) அறிவித்துள்ளது.
குறித்த சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான வாய்மூல சமர்ப்பணங்கள் இன்று நிறைவடைதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக நீக்கப்படும்
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

விசாரணையின்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயரத்ன, சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள முக்கியமான சில திருத்தங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரைத் தடுத்து வைக்கக்கூடிய கால எல்லை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பச்சை குத்தல்கள் மற்றும் உடலில் காணப்படும் அடையாளங்கள் தொடர்பாக சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த ஏற்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாரதூரமான குற்றச்சம்பவம் தொடர்பான வழக்கில் இடம்பெறும் ஏதேனும் விடயத்தைப் பகிரங்கப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த சரத்தும் நீக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான உயர்நீதிமன்றத்தின் இறுதி முடிவு, சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |