தட்டம்மை பரவல் : கைதிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதில் சிக்கல்
நாட்டிலுள்ள 3 சிறைச்சாலைகளின் எந்தவொரு கைதியும் இன்றைய தினம் (9) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்டம்மை தொற்று பரவல் காரணமாக கைதிகளை முன்னிலைப்படுத்தப்பட முடியாது என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, மெகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் இவ்வாறு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களுக்கு அறிவிப்பு
குறித்த மூன்று சிறைச்சாலைகளிலிருந்தும் கைதிகள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் இது தொடர்பில் நீதிமன்றுக்கு எழுத்துப்பூர்வ அறிவித்தல்களையும் வழங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கைதிகளை மீண்டும் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளை விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
அத்துடன் மூன்று சிறைச்சாலைகளிலிருந்து கைதிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றங்களுக்குத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |