வெளிநாடொன்றில் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்த படகு கடலில் மூழ்கியதில் 21 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆபிரிக்க நாடான செனகலின் கெபிமேர் நகரிலிருந்து ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளுக்கு சென்ற படகொன்று கடலில் மூழ்கியதில் 21 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு ஆபிரிக்க நாடான, செனகலின் தாக்கர் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ளது தான் கெபிமேர் நகரம்.
நேற்று (08) அதிகாலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குழுவொன்று படகு வழியாக மேற்கு ஆபிரிக்கா வழியாக ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளுக்கு செல்ல புறப்பட்டுள்ளனர்.
கடல் சீற்றம்
அவர்கள் புறப்பட்டு சென்று கொண்டிருந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக கடலில் படகு கவிழ்ந்து மூழ்கியுள்ளது.

இதில் 21 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஒருவர் மீட்கப்பட்டு இருப்பதாகவும் செனகல் நாட்டு உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த படகில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற விபரம் இதுவரையில் தெரியவில்லை என்றும், மீட்பு பணியை கடற்படையினர் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது மிகவும் ஆபத்தான கடல் வழி என்றும், கடந்த 5 மாதங்களில் மட்டும் 635 பேர் இக்கடல் வழியாக பயணித்து படகு மூழ்கி உயிரிழந்து இருப்பதாகவும் செனகல் நாட்டு கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |