யாழில் இளைஞனைத் தாக்கி பணம் பறித்த போதை ஆசாமி : நீதிமன்றின் அதிரடி உத்தரவு
யாழ்ப்பாணத்தில் பலர் பார்த்திருக்கும் போது போதை ஆசாமி ஒருவர், இளைஞன் மீது தாக்குதல் நடாத்தி, ஒரு தொகை பணத்தை அபகரித்தமை தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்த நிலையில் தாக்குதலாளியான போதை ஆசாமியை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்து யாழ்ப்பாண நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், கல்வியங்காடு சந்தைக்கு அண்மித்த பகுதியில் உள்ள மதுபானசாலை வாசலில் கடந்த சனிக்கிழமை (07) நிறை போதையில் நின்ற நபர் ஒருவர் எதிரே உள்ள வங்கி ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வருவோரிடம் மிரட்டி பணம் பெற்று வந்துள்ளார்.
பணம் அபகரிப்பு
அப்போது பணம் எடுத்து வந்த இளைஞன் ஒருவரிடமும் பணம் கேட்ட நிலையில், இளைஞன் பணம் கொடுக்க மறுத்ததையடுத்து இளைஞனுடன் தர்க்கப்பட்டுள்ளார்.

இளைஞனும் தர்க்கப்பட்ட நிலையில், இருவருக்கும் இடையில் கைக்கலப்பு ஏற்பட்ட போது இளைஞனை மூர்க்கத்தனமாக தாக்கிய போதையில் நின்ற நபர், இளைஞனிடம் இருந்து ஒரு தொகை பணத்தினையும் அபகரித்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்ககளில் வைரலாகி இருந்தது. காணொளியின் அடிப்படையில் , கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதனையடுத்து தாக்குதலாளியான போதை ஆசாமியை கைது செய்து, காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்று (08) யாழ்ப்பாண நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |