திருகோணமலை - முத்து நகர் பகுதியில் பரபரப்பு - குவிக்கப்பட்டுள்ள அதிரடிப் படை
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்து நகர் பகுதியில் துறை முக அதிகார சபையினர் உள் நுழைந்தததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இன்று (22) காலை மக்கள் காணிகளை கையகப்படுத்த முனைவது தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளதாக தெரியவருகிறது.
காவல்துறை விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திருகோணமலை – முத்துநகர் பகுதியில் இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 25 பேருக்கு பிஸ்கால் சமர்ப்பிக்கப்பட்டு வெளியேற்றும் நடவடிக்கை நீதிமன்றத்தின் நீததவானின் கட்டளைக்கு இணங்க இடம் பெற்றுள்ளது.
திருகோணமலை உப்புவெளி கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட முத்துநகர் கிராம சேவகர் பிரிவில் உள்ள தகரவெட்டுவான் விவசாய சம்மேளனத்தின் கீழ் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த விவசாயிகள் 25 பேரை வெளியேற்றும் நடவடிக்கை திருகோணமலை நீதவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைய நீதிமன்ற பதிவாளரினால் முன்னெடுக்கபட்டது.
இலங்கைத் துறைமுக அதிகார சபையினால் குறித்த விவசாயிகளுக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்குத் தீர்ப்பின் பிரகாரம் குறித்த விவசாயிகள் இன்றைய தினம் (22) வெளியேற்றப்பட்டிருந்தனர்.
குறித்த இடத்திற்கு துறைமுக அதிகாரசபை உத்தியோகத்தர்களுடன் அப்பகுதியில் சோலார் திட்டத்தை மேற்கொள்ளவுள்ள நிறுவனத்தின் பிரதிநிதிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.
அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைக்காக விசேட அதிரடிப்படையினர், காவல்துறையினர் மற்றும் துறைமுக அதிகாரசபையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த பகுதியில் 1980 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே தாம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இந்நிலையில் 1984 ஆம் காலப்பகுதியில் அமைச்சரவையின் அனுமதி இன்றி குறித்த காணிகள் இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன் குறித்த காணிகளை இந்திய சோலார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளனர். இதனால் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் எம்மை வெளியேற்றி அக்காணிகளை சோலார் திட்டத்திற்காக வழங்க உள்ளனர்.
