பொகவந்தலாவையில் வியாபார நிலையத்தில் ஊழியர் மீது தாக்குதல்! போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்
நுவரெலியா (Nuwaraeliya) - பொகவந்தலாவை ( Bogawantalawa) பகுதியில் வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் நிர்வாகத்தினரால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவை காவல் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது, பொகவந்தலாவை கிவ்தோட்ட பொதுமக்களால் இன்றையதினம்( 22.08.2024 ) காலை இடம் பெற்றது.
புடவை விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வந்த நபர் குறித்த நிலையத்திற்கு தொழிலுக்கு சென்று நேற்று இரவு 12மணிவரை வீடு திரும்பவில்லையென பொகவந்தலாவ காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை அவரது உறவினர்கள் பதிவுசெய்திருந்தனர்.
ஆர்ப்பாட்டம்
காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததை அடுத்து தோட்டபொது மக்கள் குறித்த நபரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது குறித்த நபர் பொகவந்தலாவ டியன்சின் தோட்டப்பகுதியில் உள்ள காளியம்மன் ஆலயத்தில் இருந்து இன்று காலை உயிருடன் மீட்கப்பட்டு பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நபர் ஒருவர் காணவில்லையென தெரிவித்து காவல் நிலையத்தில் முறைபாடு செய்தும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லை இந்த விடயத்தில் சம்பந்தபட்டவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியும் நீதி கோரியும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
மேலதிக விசாரணைகள்
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பொகவந்தலாவ புடவை விற்பனை நிலையத்தில் முகாமையாளராக பணிபுரிந்து வந்த நபரை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரிவி கேமராக்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டு காலினால் மிதித்து நெஞ்சுபகுதியில் தாக்கியுள்ளார்.
மேலும் அவரது மனைவியையும் தகாத வார்த்தையால் பேசியதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் விற்பனை நிலையத்தின் உரிமையாளரை பொகவந்தலாவ காவல்துறையினர் கைது செய்துள்ளதோடு குறித்த சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொகவந்தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |