மீண்டும் மின் கட்டண அதிகரிப்பு..! இன்று முக்கிய கூட்டம்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL), 2025 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் குறித்து பொது கூட்டத்தை நடத்தவுள்ளது.
மீண்டும் ஒருமுறை மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு குறித்து வலுத்துள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இன்று காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட கட்டண மாற்றங்கள்
அடுத்த ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட கட்டண மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைச் சேகரிப்பதே இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த முன்மொழிவுக்கான பொதுமக்களின் கருத்துக்களுக்கான காலம் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் இன்று முதல் தனது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை மின்சார சபை பொறியாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, மின்சார சபையின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் இன்று முதல் நிறுத்தப்படும் என்று தனுஷ்க பராக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை
தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், மீண்டும் ஒருமுறை மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக மின்சார பயனாளிகள் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று இலங்கை மின்சார சபை புதிய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரியந்த விக்ரமசிங்கவும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |