புதுக்குடியிருப்பு ஸ்ரீ உலகளந்த பிள்ளையார் ஆலய திருவிழா!(படங்கள்)
புதுக்குடியிருப்பு ஸ்ரீ உலகளந்த பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 20.09.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
அந்தவகையில் ஆறாம் திருவிழாவான மாம்பழத்திருவிழா நேற்று (25) ஆலயத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ ப.திவாகரசர்மா தலைமையில் மகோற்சவ குரு கிரிஜா தத்துவநிதி ஆகம தத்துவ போதகர் பிரம்மஸ்ரீ சோமஸ்கந்த உமாரமணச்சிவாச்சாரியார் அவர்களது பங்குபற்றுதலுடன் விசேட வசந்த மண்டப பூசைகளை தொடர்ந்து எம்பெருமான் எழுந்தருளி வந்து மாம்பழத் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
வேட்டை திருவிழா
ஆலய திருவிழாவின் சிறப்பு வாய்ந்த 7 ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்றையதினம் (26) மிகவும் சிறப்புற இடம்பெற்றது.
பாரம்பரியமாக வேட்டை திருவிழா இடம்பெறும் துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் புடைசூழ ஆரம்பித்த வேட்டை திருவிழாவானது வேட்டையாடப்பட்டு யானையில் பிள்ளையார் துர்க்கா வீதி வழியாக வலம் வந்து உலகளந்த பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்தது.
இந்த வேட்டை திருவிழாவில் வேடுவர் வேடம் தரித்து அடியவர்கள் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர். எந்தவொரு ஆலயங்களிலும் இடம்பெறாத வகையில் இங்கே வேட்டைத்திருவிழா யானையில் சுவாமி வலம்வந்து சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் வேட்டை திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், நாளை (27) சப்பறத்திருவிழாவும் நாளை மறுதினம் (28) தேர்த்திருவிழாவும் இடம்பெற்று 29.09.2023 அன்று தீர்த்தத் திருவிழாவுடன் ஆலய உற்சவம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.