தமிழ் இனத்தின் விடுதலைக்காக தியாக தீபமாக மாறிய திலீபனின் அசைபோடும் நினைவுகள்! (காணொளி)
சாதாரணமாக இன்றைய காலத்தில் ஒரு 23 வயது இளைஞனுக்கு எந்த அளவுக்கு பொறுப்புகள், சமூக கடமைகள் தொடர்பான தெளிவு, சமூக பொறுப்பு என்பது இருக்கும் என்று தெரியாது.
கிட்டத்தட்ட இந்த நவீன காலத்தில் 23 வயதுடைய ஒருவர் ஒரு மாணவராக, அல்லது ஒரு தொழில் செய்யும் ஆரம்ப நிலையில் இருக்கலாம்.
ஆனால், கடந்த 36 வருடங்களுக்கு முன்னர் ஒரு 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவன் இந்த உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தார்.
திலீபனின் தியாகம்
தனது தாய் நாடு மீதான அவரது கனவும், அவாவும், விடுதலை வேட்கையும் அத்தனைப் பெரியது. நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு அவரது தியாகம் விலைமதிப்பற்ற ஒன்றாக இருந்திருக்கின்றது.
ஆம்... தியாக தீபம் திலீபன் தான் அவர். இராசைய்யா பார்த்திபன் எனப்படும் லெப்டினன் கேணல் திலீபன் அவர்கள், நவம்பர் 27, 1963ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் ஊரெழுவில் பிறந்தவர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவராக இருந்த திலீபன் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டவர். அவர் கருத்தியல் ரீதியாக ஆழமான புரிதல் கொண்ட ஒரு போராளியாக இருந்தார்.
பால்நிலை மற்றும் சமூக சமத்துவக் கண்ணோட்டம், பிற்போக்குத்தனங்களை உடைக்கும் முற்போக்குத் தன்மை கொண்ட திலீபன் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஜனநாயக முகமாகும்.
ஐந்து அம்சக் கோரிக்கை
திலீபனின் முகம் இன்று அனைவருக்கும் அச்சொட்டாக நினைவிருக்கும். ஆனால், காலகாலமாக சொல்லக் கேட்டிருக்கின்றோம் அவரது முகம் மாத்திரம் அல்ல அவரது குரலும் அதன் கம்பீரமும், அவரது தாயக சிந்தனையும் அவரின் கருத்துக்களை கேட்கும்போது, கேட்பவர்களை தன்பால் ஈர்க்கும் வல்லமை கொண்டது என்று.
தாயக கனவுடன், ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணா நோன்பு நோற்று, 12 நாட்கள் சொட்டு தண்ணீர் அருந்தாமல் தாயக கனவுடனேயே மரித்துப் போன ஒரு விடுதலை வேங்கை திலீபன்...
இன்று 36 ஆண்டுகள் பூர்த்தி ஆகும் நிலையில் அவரது திருவுருப் படத்திற்கு அஞ்சலி செலுத்துவதில் தான் எத்தனை அரசியல், எத்தனை அடிபிடி, எத்தனை அடக்குமுறைகள்.
இவை அனைத்தையும் தாண்டி உணர்வுள்ள ஒவ்வொரு ஈழத்தமிழர்களும் மானசீகமாக, எதிர்ப்புகளை மீறியும் தியாக தீபத்தை நினைவேந்திக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறிருக்கையில், திலீபன் உயிர் பிரிந்து 36 வருடங்களுக்கு பிறகு அவர் தொடர்பான வெளிவராத பல உண்மைகள் தற்சமயம் வெளியாகியிருக்கின்றன.
திலீபனின் நெருங்கி நண்பரின் பதிவு
இது தியாக தீபம் திலீபனின் நெருங்கி நண்பர் பகிர்ந்து கொள்ளும் ஒரு பதிவு, இவையனைத்தும், 1984 இல் புன்னாலைக்கட்டுவன் பிரதேசப்பொறுப்பாளராகவும், 1987 இல் வெளீயீட்டுப்பிரிவு பொறுப்பாளராகவும், 1988 இல் தமிழ்நாட்டில் அரசியல்பணி செய்தவரும், 1990 இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் மக்கள் முன்ணனியின் யாழ்மாவட்ட அமைப்பாளரும் 1991 இல் யாழ்மாவட்ட அரசியல் நிர்வாக பொறுப்பாளராகவும், தீலிபனுடன் 12 நாட்கள் மேடையில் இருந்தவருமாகிய இ . ராஜனின் ஆவணப்படுத்தும் தேடலின் முயற்சியின் எழுத்துருவாக்கம் இந்த தகவல்கள்.
கடந்த 23ஆம் திகதி(23.09.2023) லண்டன் நேரம் காலை 11 மணிக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து ஒரு வட்சப் தொலைபேசி அழைப்பு ராஜனுக்கு வருகின்றது. அழைப்பேற்படுத்தியவர், தியாகி தீலிபனின் நெருங்கிய பள்ளி நண்பன் ரவிராஜ். திலீபனின் உற்ற பாடசாலை நண்பராக ரவிராஜ் அடையாளப்படுத்தப்படுகின்றார்.
பல தேடல்களுக்குப் பிறகு திலீபனின் நண்பரது தொடர்பு ராஜனுக்கு கிடைத்தது. இதன்போது, ராஜனுடன் நினைவுகளை பகிர்ந்து கொண்ட ரவிராஜ், திலீபன் அப்பா இராசையா ஆசியர் ஸ்கூட் டரை தானும் தீலிபனும் ஓடியதும் துவிச்சக்கரவண்டியில் சுற்றித்திரிந்த நினைவுகளை ரவிராஜ் மீட்டினார்.
பாடசாலை நாட்களில் ஒரு நாள் மனோகரா தியேட்டரில் படம் பார்த்ததாகவும் படத்தின் பெயர் நினைவு வருகிறது இல்லை என்றும் அந்த சந்தோசமான நாளைபற்றியும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.
தீலிபனின் தகப்பன்
யாழ் இந்து சார்பில் தீலிபனும் நண்பர்களான நிமலன், மகேசன், பரதன் கொழும்பு சென்று சதுரங்க போட்டியில் கலந்து கொள்வது பற்றியும் அந்த அனுபவங்களை திலீபன் பகிர்ந்து கொள்வதையும் அவனின் சதுரங்க ஆட்டத்தை பற்றியும் ரவிராஜ் பெருமையாக கூறினார்.
1976 இல் தீலிபனின் உறவினர்கள் மலேசியாவிலிருந்து ஊரெழு வீட்டிற்கு வந்ததாகவும் அவர்கள் கொடுத்த சொக்கலேட் வாசனைதிரவியங்களை தங்களிற்கும் கொண்டுவந்து தந்து பகிர்ந்து கொண்டதையும் அவனின் அந்த மகிழ்சியான தருணங்களையும் எண்ணிப்பார்த்தார் தீலிபனின் தகப்பன் சமைத்து தீலிபனுக்கு கட்டிக்கொடுத்துவிடும் உணவை தங்களிற்கு தந்து தங்கள் உணவை வேண்டி மாற்றி சாப்பிட்ட மதிய இடைவேளை நாட்களையும் தீலிபனின் தியாக வேள்வி நாட்களையும் பற்றி ரவிராஜ் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பாடசாலை நாட்கள் இல்லாத வேளையில் திலீபன் வீட்டிற்கு சென்று அவன் வீட்டிற்கு பின்னால் உள்ள மரவள்ளி தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு பிடுங்கி சுட்டு சாப்பிட்டு தோட்டக்கிணற்றில் உள்ள தொட்டியில் நீச்சல் அடித்து நீந்திய நினைவுகளையும் , இராசையா மாஸ்டர் அதிகம் பேசாமல் உபசரிப்பதையும் ரவிராஜ் இதன்போது நினைவில் கொண்டுவந்தார் தியாகி திலீபன்வீட்டு வரவேற்பரை சுவற்றில் தாயின் படம் இருப்பதாகவும் 1964 அவர்மரணமடைந்ததாகவும் ரவிராஜ் கூறினார்.
அசைபோடும் நினைவுகள்
இஞ்சி தேநீர் முதன் முதலில் திலீபன்வீட்டில்தான் பருகியதாகவும். இராசையா ஆசிரியர் தான் அதனை ஊற்றி தந்ததாகவும் அப்படி ஒரு தேநீர் இருப்பதாக அன்று தான் தனக்கு தெரிந்ததாகவும் என்று கூறி ஒரு சொட்டு நீரும் அருந்தாது தியாகி ஆகிய நண்பனையும் இராசையா ஆசியரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
தீலீபன் ஊரேழு இல் இருந்து தினமும் அவர் வீட்டுக்கு வந்து அவரை துவிச்சக்கர வண்டியில் ஏத்தி கொண்டு யாழ் இந்து செல்வது வழக்கம். க. பொ .த உயர்ப்பிரிவுக்கு அவர்கள் இருவரும் சென் ஜோன்ஸ் அக்கடமிக்கு சென்ற போதும் இந்த பழக்கம் தொடர்ந்தது.
ஆனால் சென் ஜோன்ஸ் அக்கடமி பயணங்கள் கொஞ்சம் சுவாரிஸ்யமாக இருந்தாம். கட்டு பாடுகள் கொஞ்சம் தளர்ந்திருந்தனவாம்.
காலம் தாழ்த்தி வகுப்பு செல்வதொன்றும் அவ்வளவு பெரிய குற்றம் அல்ல அப்போது. மதிலில் குந்தி இருந்து பலதும் பத்தும் பேசினார்கள். அரசியல், சமூக விழிப்புர்ணர்வுகள் கொஞ்சம் அவர்களை நெருங்கி இருந்தன.
1983 இல் சிங்கள அரசாங்கத்தால் அடித்து விரட்டப்பட்டு கப்பல் மூலம் அகதிகளா தமிழ் மக்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டபோது தீலிபனும் ரவிராஜ் உம் மற்றும் நண்பர்களும் ஓடிச்சென்று உதவிகள் புரிந்ததையும் அந்த சம்பவம் எப்படி தங்கள் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியது என்று அன்றைய மன உணர்வுகளை ரவிராஜ் அப்படியே மீள் பதிவு செய்தார்.
விடுதலைப் போராளி திலீபன்
திலீபன் தங்கள் வீட்டிற்கு வருவதாகவும் தன் அம்மா மீது மிகுந்த பாசம் கொண்டவனாக இருந்தான் என்றும் அன்றைய அவனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டார் ரவிராஜ்
1984 ம் ஆண்டே வெளிநாடு சென்று விட்டதாகவும் பின்பு 1985ஆ ம் ஆண்டு திரும்பி இலங்கை வந்த போது திலீபனை தனியாக வந்து ஒரு விடுதலைப் போராளியாக சந்தித்ததையும் அவருடன் அரசியல் பேசியதையும் சிலாகித்து கூறிக்கொண்டார் ரவி ராஜ்.
1987ஆம் ஆண்டும் இலங்கை வந்த போது திலீபன் ஒரு கையேஸ் வாகனத்தில் இரு போராளிகள் ஆயுதம் தாங்கி வர வந்து தன்னை சந்தித்தாகவும் அந்த சந்திப்பு இறுதி சந்திப்பாக அமையும் என்று எண்ணவில்லை என்றார்.
கல்லூரி நண்பனாகவும் பல வருடங்கள் பழகிய ஒருவரையும் தீலிபனின் போராட்ட வாழ்க்கையில் இரண்டு முறை சந்தித்த உற்ற நண்பன் ரவிராஜ் இடம் என் முதல் பொறுப்பாளரும் மக்கள் பணி அரசியல் பணி பழக்கியவருமாகியவர் மனம்விட்டு பேசும் இனிய நண்பனுமாகிய என் நெஞ்சுக்கு நெருக்கமாகிய தீலிபனின் கல்லூரி உற்ற நண்பன் ரவிராஜ் இடம் அவனது இளமை கால நினைவுகளை 36 வது வருடத்தில் வட்சப்பில் இருவரும் முகம் பார்த்து ஒரு மணித்தியாலம் கதைத்து ரவிராஜின் நினைவில் நின்ற தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் என ராஜன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்