யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தை யாழ் பல்கலைக்கழக (University of Jaffna) புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
அதிகளவிலான வெப்பநிலை
இதன் காரணமாக இன்று முதல் (23.02.2025 ஞாயிற்றுக்கிழமை) எதிர்வரும் 02.03.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதத்தின் பல நாட்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மழை கிடைக்கும் நாட்களாக அமையும் என்பது மகிழ்ச்சியான செய்தி.
பொதுவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காலநிலை அமைப்பின் பிரகாரம் மார்ச் மாதம் அதிகளவிலான வெப்பநிலை நிலவும் மாதமாகும் இதனால் தான் எமது முன்னோர்கள் பங்குனி மாதம் பாதை வழி போவோரைப் பார்த்திருக்க பாவம் என கூறுவார்கள்.
எனினும் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் கணிசமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதிக உயரம் கொண்ட அலைகள்
இது எங்கள் பிரதேச வானிலையில் ஒரு சௌகரியமான வானிலை நிலைமையை உருவாக்கும். அயன இடை ஒருங்கல் வலய செயற்பாட்டினால் தூண்டப்பட்ட மேற்காவுகை காரணமாகவே மார்ச் மாதம் அதிகளவிலான மழை நாட்கள் நிலவ வாய்ப்புண்டு.
ஆனால் மார்ச் மாதத்தில் கிடைக்கவுள்ள மழை மேற்காவுகை மழை என்பதனால் இடி மின்னல் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் சிறு போக நெற்செய்கை இக்காலத்தில் ஆரம்பிக்கும் என்பதனால் மேற்குறிப்பிட்ட மழை நாட்களைக் கருத்தில் கொள்ளுமாறு விவசாயிகள் வேண்டப்படுகிறார்கள்.
எதிர்வரும் 26.02.2025 முதல் 01.03.2025 வரை இலங்கையின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
அதேவேளை இக்காலத்தில் வடக்கு கடற்பகுதிகள் அதிக உயரம் கொண்ட அலைகளைக் கொண்டதாக காணப்படும். எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மீனவர்கள் இதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது என புவியியல்துறை விரிவுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்