மக்களை நெருக்கடிக்குள் தள்ளிவிட்ட ராஜபக்சர்கள் - எதிரணி எம்.பி குற்றச்சாட்டு
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தாக ஆட்சிக்கு வந்த ராஜபக்சர்கள், இன்று மக்களை வீட்டில் இருக்க முடியாத நிலைக்குள் தள்ளியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல (JC Alawathuwala) குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
''தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கம், தமக்கு எதிராக காணப்பட்ட நீதிமன்ற வழக்குகளை அகற்றிக் கொள்ளும் வகையில் இனவாதம், மதவாதம் பேசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளது.
நாட்டில் இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது பாரிய பிரச்சினையாகும்.
ராஜபக்ஷ அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் ஹிட்லரின் செயற்பாடுகள் போன்றுள்ளது. அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளுவதற்காக சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிட்டுள்ளார்கள்.
இன்று மக்கள் ராஜபக்சர்களின் பொய்களை உணர்ந்து கொண்டுள்ளார்கள். மக்களை மீண்டும் இவர்களினால் ஏமாற்ற முடியாது.
லிட்ரோ சமையல் எரிவாயு உற்பத்தி நிறுவனம் அரசாங்கத்திற்கு உரிய நிறுவனம். ஆகவே சமையல் எரிவாயு வெடிப்பினால் ஏற்பட்ட அனர்த்தத்திற்கும் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.
அரசியல்வாதிகள், நிறுவன அதிகாரிகளை காட்டிக்கொடுத்துவிட்டு தப்பித்துக் கொள்ள முடியாது. இன்று மக்கள் சமையல் அறையில் வெடிகுண்டை வைத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். சமையல் அறைப் பக்கம் போவதற்கு மக்கள் அஞ்சுகிறார்கள்.
தேசிய பாதுகாப்பைப் பற்றி பேசி ஆட்சியைக் கைப்பற்றிய ராஜபக்சர்களினால் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவம் என்பது கொலைக்கு சமனானது. சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குத்தாக்கல் செய்து, தண்டனைக் கோவையின் பிரகாரம் தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றார்.