பசிலின் இரகசியத்திட்டம் இதுதான்! உண்மையினை போட்டுடைத்தது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையின் அனுமதியின்றி நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ரூபாயை மிதக்க விட தீர்மானித்தார் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் மருத்துவர் வசந்த பண்டார (Wasantha Bandara) தெரிவித்துள்ளார்.
இதனால், பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். அவர் இந்த யோசனை கொண்டு வந்து நாட்டின் பொருளாதாரத்தை மேலும் கஷ்டமான நிலைமைக்குள் தள்ளியுள்ளார். இவை அனைத்தையும் சர்வக்கட்சி மாநாட்டின் மீது சுமத்தி விட்டு, கைகளை கழுவுவதே பசில் ராஜபக்சவின் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக, எரிசக்தி அமைச்சராக ரிஷாட் பதியூதீன் நியமிக்கப்படலாம். அவர் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து கடனுக்கு எரிபொருளை கொண்டு வரலாம் என கலந்துரையாடலில் பேசப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி மாநாடு யோசனையின் மூலம் பசில் ராஜபக்ச ஒரு கல்லில் 5 மாங்காய்களை பறிக்க தயாராகி வருகிறார்.
இந்தியா தலைமையிலான பிரிவினைவாத சக்திகளும், புலம்பெயர்ந்த தமிழர்களும் அனைத்து கட்சி அசராங்கத்தை அமைக்குமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
அதற்கு பின்னர் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இது வெறுமனே தேசிய அரசாங்கம் அல்ல. அழுத்தங்களுக்குள் இந்த யோசனைகள் வரும் போதே எமக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதன் ஊடாக பசில் ராஜபக்ச தனது ஐந்து துஷ்ட நோக்கங்களை நிறைவேற்ற முயற்சித்து வருகிறார்.
ஒரு கல்லில் 5 மாங்காய்களை வீழ்த்த பார்க்கின்றார். இதன் முதல் நோக்கமே சர்வக் கட்சி மாநாடு. இதன் ஊடாக தேசிய அரசாங்கத்தை அமைப்பது. சர்வக்கட்சி மாநாடு என்பது அரசாங்கத்தின் யோசனையல்ல.
இந்த அரசாங்கத்தில் யாரெல்லாம் அமைச்சர்கள் பதவிகளை பெற போகிறார்கள். ராஜித சேனாரத்ன, ரிஷாட் பதியூதீன் போன்றவர்கள். இது மக்களின் ஆணைக்கு முற்றாக புறம்பான செயல். இந்த துஷ்ட செயலில் சிக்கி விட வேண்டாம் என நாங்கள் மைத்திரிபால சிறிசேனவிடம் கோருகிறோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை நீர்த்து போக செய்வது இரண்டாவது நோக்கம். சர்வக் கட்சி மாநாடு மூலம் மக்களின் மனங்களில் நன்மையான உணர்வை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம்.
இது பசில் ராஜபக்சவின் மனநல அறிவியல் தந்திரம். சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது தொடர்பில் சர்வக் கட்சி மாநாட்டில் இணக்கத்தை பெறுவது மூன்றாவது நோக்கம். தற்போதும் சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளையே நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையின் அனுமதியின்றி நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ரூபாயை மிதக்க விட தீர்மானித்தார்.
இதனால், பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். அவர் இந்த யோசனை கொண்டு வந்து நாட்டின் பொருளாதாரத்தை மேலும் கஷ்டமான நிலைமைக்குள் தள்ளியுள்ளார். இவை அனைத்தையும் சர்வக்கட்சி மாநாட்டின் மீது சுமத்தி விட்டு, கைகளை கழுவுவதே பசில் ராஜபக்சவின் நோக்கம்.
அரசாங்கத்தை சிறந்த வழிக்கு கொண்டு வர 11 அரசியல் கட்சிகள் இணைந்து ஐக்கியமான கூட்டணியை ஏற்படுத்தியுள்ளன. அதற்கு பிரச்சினைகளை உருவாக்குவது நான்காவது நோக்கம்.
அந்த கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்பது பசில் ராஜபக்சவின் திட்டம். இந்த கூட்டணிக் கட்சி முன்வைத்துள்ள முழு நாடும் சரியான பாதைக்கு என்ற யோசனை குறித்து சமுகத்தில் ஏற்பட்டுள்ள வாத விவாதங்களை நீர்த்து போக செய்வது ஐந்தாவது நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
