மத்தியஸ்தம் வகிக்க வந்த ராஜீவை சண்டையில் குதிக்க வைத்த ஜே.ஆர்.
இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அக் காலகட்டத்தில் இடம்பெற்றுவந்த தேன்நிலவிற்கு முற்றுப்புள்ளி வைத்த ஒரு நிகழ்வாகவே, புலேந்திரன் குமரப்பா உட்பட 12 போராளிகள் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அமைந்திருந்தது.
இந்த விடயத்தில் இந்தியா பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்துகொள்ளத் தவறியதே, பிற்காலத்தில் இந்தியப்படைகள் ஈழத்தில் ஒரு மாபெரும் அவலத்தைச் சந்திக்க பிரதான காரணமாக அமைந்திருந்தது என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இது இந்தியா விட்ட மாபெரும் வரலாற்றுத் தவறு என்று, இந்தியாவின் சரித்திரத்தை வரைந்த பல ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். ஜே.ஆரினதும், அத்துலத் முதலியினதும் சூழச்சி வலையில் இந்தியா தெரிந்துகொண்டே விழுந்திருந்த சந்தர்ப்பம் என்றும் இந்தச் சம்பவம் பற்றி பலர் கண்டனம் வெளியிட்டிருந்தார்கள்.
An Independent view from London’ என்ற புத்தகத்தில் புறுர்ஸ் போலிங் என்ற ஆய்வாளர் இந்தச் சம்பவம் பற்றி இவ்வாறு எழுதியிருந்தார் ‘அத்துலத் முதலி, சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த 1984 முதல் 1989ம் ஆண்டு காலம் வரை, அவர் சிறிலங்காவின் அரசியலில் முக்கிய பாத்திரத்தை வகித்து வந்தார்.
ஊடகத்துறையுடன் நேரடியான தொடர்புகளை வைத்திருந்த ஒரே அமைச்சரும் அத்துலத் முதலியாகவே இருந்தார். மிகவும் புத்திசாலியான இவர் பல சந்தர்பங்களில் இரக்கமற்ற ஒரு மனிதராகவும் நடந்துகொண்டிருந்தார்.
1987ம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் போது, பாக்கு நீரினையில் கைதுசெய்யப்பட்ட சில விடுதலைப் புலிகளை இந்தியப்படைகள் சிறிலங்காப் படைகளிடம் கையளிக்கவேண்டும் என்பதில் அத்துலத் முதலி மிகவும் பிடிவாதமாக இருந்தார்.
இந்தச் சம்பவத்தில் பல விடுதலைப் புலிப் போராளிகள் தற்கொலை செய்துகொள்ள, இந்தியப் படைகளுக்கு எதிராக புலிகள் நேரடி யுத்தத்தில் இறங்கும் சூழ்நிலை அங்கு உருவானது.
இந்த விடயம் பற்றி நான் அத்துலத் முதலியிடம் பேசும் பொழுது, ‘நிலமை இப்படி மோசமாக மாறிவிடும் என்பதை நீங்கள் முன்னரே உணர்ந்து, இதனைத் தவிர்த்திருக்கவேண்டும் என்று தெரிவித்தேன், அதற்கு அத்துலத் முதலி, “உண்மையிலேயே என்ன நடக்கவேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தோமோ, அதுதான் நடைபெற்றது.
இந்தியாவை எங்கள் பக்கம் திருப்புவதற்கு ஒரு சரியான சந்தர்ப்பத்தை நாங்கள் பலகாலமாகவே எதிர்பார்த்த்துக் காத்துக்கொண்டிருந்தோம் என்பதே உண்மை என்று பதிலளித்திருந்தார்.
இவ்வாறு புறுஸ் பேலிங் தனது அந்தப் பத்தியில் தெரிவித்திருந்தார். இந்தப் பத்தியை, THE SUNDAY TIMES ஆங்கிலப் பத்திரிகை 02.05.93 இல் மறுபிரசுரம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஜே.ஆரும், அத்துலத் முதலியும் எவ்வளவு கெட்டித்தனமாக இந்தியாவை தமது வலையில் விழச் செய்திருந்தார்கள் என்பது இதில் இருந்து புரிகின்றது.
சிங்களத் தரப்பே காரணம்
இந்திய இலங்கை ஒப்பந்தத்திலும் சரி, அதன் பின்னர் விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவிற்கு இடையில் முறுகல் நிலை உருவானதிலும் சரி, முக்கிய பங்கு வகித்த நபர் என்று பல தரப்பினராலும் விமர்சிக்கப்படும் ஒரு நபர் இலங்கைக்கான இந்தியத் தூதுவராக அக்காலகட்டத்தில் பணியாற்றிய ஜோதின்ரா நாத் தீட்ஷித் (ஜே.என்.தீட்ஷித்). இவர், பின்னர் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின், தனது பதவிக் காலத்தில் இடம்பெற்ற பல அரசியல் தவறுகள் பற்றி மனம் திறந்து வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தியாவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பகை மூண்டது பற்றி, தீட்ஷித் வழங்கியிருந்த செவ்வி ஒன்றில், இந்தியப்படையின் காலத்தில் சாமாதானம் குழம்பியதற்கு சிங்களத் தரப்பே காரணம் என்று தெரிவித்திருந்தார்.
1994ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14ம் திகதி வெளிவந்த வுர்நு SUNDAY LEADER ஆங்கிலப் பத்திரிகையில் தீட்ஷித்தின் செவ்வி பிரசுரமாகி இருந்தது.
அவர் அந்தச் செவ்வியில் இவ்வாறு தெரிவித்திருந்தார். “1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதக் கடைசியில் இருந்து ஒக்டோபர் மாத நடுப்பகுதி வரை, சமாதான முயற்சிகளில் பாரிய ஒரு தேக்கநிலை காணப்பட்டது. சமாதான முயற்சிகளுக்கு எதிராக சிங்களத் தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட தடங்கல்களே அதிகமானதாக இருந்தது.
தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்குவதற்கு இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அதிகாரப் பரவலாக்கத்தையும், நிதி கையாள்கை சம்பந்தமான தீர்வுகளையும் திட்டமிட்டு சிறிலங்கா அரசாங்கம் இழுத்தடித்து வந்தது.
ஆகவே, 1983 காலப்பகுதியில் இருந்த நிலமையை நோக்கியே சமாதான முயற்சிகள் சென்றுகொண்டிருப்பதாக தமிழ் மக்கள் சந்தேகப்பட ஆரம்பித்திருந்தார்கள். இது அப்பொழுது இடம்பெற்றுகொண்டிருந்த ஒரு முக்கியமான பிரச்சினை.
ஆனால் இந்தியாவை புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நோக்கித் திருப்புவதற்கு பிரதானமாக ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தது.
ஜே.ஆரின் தந்திரம்
17 இளைஞர்களை கொழும்புக்கு கொண்டு வரவேண்டும் என்ற விடயத்தில் அத்துலத் முதலி மேற்கொண்டிருந்த பிடிவாதமே இந்தப் பிரச்சினை ஆரம்பமாவதற்கு மிகவும் பிரதான காரணம் என்று கூறவேண்டும்.
அவர்கள் இந்தியப் படைகளினது பாதுகாப்பிலேயே தொடர்ந்தும் வைக்கப்பட்டிருக்கவேண்டும். சில விடயங்களில் எம்மால் இணக்கம் காண முடிந்திருந்தது.
ஆமாம், ஜே.ஆர். சில அரசியல் நகர்வுகளுக்கு சம்மதித்திருந்தார். ஆனால், அத்துலத் முதலி சில சதித்திட்டங்களை தன்னகத்தே கொண்டு செயற்பட முனைந்ததால்தான், இந்தியாவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பிரச்சினைகள் உருவானது.
ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் விருப்பத்திற்கு மாறாக அத்துலத்முதலி நடந்துகொள்ள முயன்றதால்தான், அந்த இளைஞர்கள் அநியாயமாக நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள நேரிட்டது.
இந்தச் சம்பவம் மிகவும் துக்ககரமான ஒரு சம்பவம் என்பதுடன், புலிகளின் தலைமைத்துவத்தை மிகவும் கோபமடையவும் வைத்த ஒரு சம்பவம் என்றே கூறவேண்டும்.
அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு நம்பிக்கைத் துரோகமான ஒரு செயலாகவே பார்க்கப்பட்டது. ஒரு வகையில் இது உண்மையும் கூட. இவ்வாறு தீட்ஷித் தனது செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
இதில் இருந்து, சிறிலங்கா அரசாங்கம் இந்தியவை எப்படி திட்டமிட்டு தனது வலையில் விழ வைத்திருக்கின்றது என்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது.
இதேபோன்று, 13.11.1994 அன்று வெளியான THE ISLAND பத்திரிகையில், ‘தேசிய சமாதானப் பேரவையில் தலைவரும், பிரபல சிங்கள ஊடகவியலாளருமான ஜெகான் பெரேரா இவ்வாறு தெரிவித்திருந்தார்:
“ஆரம்பம் முதலே ஜெயவர்த்தனாவும், அவரது லெப்டினட்களும் இந்த ஒப்பந்தத்தை எப்படி முறியடிப்பது, இந்தியாவை எப்படி ஏமாற்றுவது என்று திட்டமிட்டபடியே இருந்தார்கள்.
இதற்கான முயற்சிகளை அவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொண்டபடியே இருந்தார்கள். படிப்படியாக அவர்கள் மேற்கொண்டு வந்த முயற்சிகள் இறுதியில் அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தது.
ஈழப் போராளிகளைச் சமாளிப்பதற்கும், சிதைப்பதற்கும் இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் விடயத்தில் ஜேஆரும், லலித்தும் ஆரம்பம் முதலே திட்டமிட்டு செயலாற்றி வந்திருந்தார்கள்.
ராஜீவை அவர்கள் மிகவும் தந்திரமாக தமது பொறியில் விழ வைத்திருந்தார்கள். இவ்வாறு ஜெகான் பெரேரா தனது பத்தியில் எழுதியிருந்தார்.
இந்தியாவை புலிகளுக்கு எதிராக திருப்பிவிட்ட தனது தந்திரம் பற்றி ஜே.ஆர் பல சந்தர்ப்பங்களில் பெருமிதம் வெளிப்படுத்தியிருந்ததும் நோக்கத்தக்கது.
அவர் ஒரு தடவை நாடாளுமன்றத்தில் இதனை புன்முறவலுடன் தெரிவித்திருந்தார். குஸ்திக்கு மத்தியஸ்தம் வகிக்கவென்று வந்த ராஜீவே கடைசியில் கோதாவில் குதிக்கும்படியாக ஆகிவிட்டது என்று நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.
தலைவர் பிரபாகரனின் செவ்வி
இந்தியப் படைகள் புலிகளால் தோற்கடிக்கப்பட்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் ‘டைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கிய ஒரு செவ்வியில், இந்தியாவுடன் யுத்தம் மூண்டதற்கான காரணத்தை குறிப்பிட்டிருந்தார்.
பிரபல இந்திய பத்திரிகையாளர் அனிதா பிரதாபிற்கு அவர் வழங்கியிருந்த செவ்வி 08.04.1990 இல் வெளிவந்த TIMES’ சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
அந்தச் செவ்வியில் அவர் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில், ‘ஒப்பந்த காலத்தில் சிறிலங்காப் படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்த எமது போராளிகள் பன்னிருவரை விடுவிக்க இந்தியா தவறியிருந்தது.
அவர்களுடைய பரிதாபகரமான மரணம் இந்தியாவுடன் மோதவேண்டும் என்ற முடிவுக்கு எம்மைக் கொண்டு சென்றிருந்தது. இவ்வாறு தலைவர் பிரபாகரன் தனது செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியா விட்ட தவறால், விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் 12 பேர் அநியாயமாக பலியானதுதான், புலிகள் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதற்கு காரணமாக இருந்தது.
இந்தியாவை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்திருந்த விடுதலைப் புலிகளைக் காப்பாற்றும் பொறுப்பில் இருந்து இந்தியா தவறி இருந்தது. சிறிலங்கா அரசு விரித்திருந்த வலையில் இந்தியா தெரிந்துகொண்டே விழுந்தது.
இது இந்தியாவை நம்பியிருந்த ஈழத்தமிழர்களுக்கு இந்தியா செய்திருந்த மிகப்பெரிய துரோகம் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |