ஈழத்தமிழர் பற்றி ஒன்றுமே தெரியாத ராஜீவ் காந்தி
ஈழத் தமிழர் பிரச்சனையில் அர்ப்பணிப்புடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதாக வெளி உலகிற்கு காண்பித்துக்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி, உண்மையிலேயே ஈழத்தின் வராலாறு பற்றி ஒன்றுமே தெரியாதவராக இருந்தார்.
புலனாய்வு அதிகாரிகள் வழங்கும் தரவுகளை மட்டும் வைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு தீர்மாணங்களை எடுக்கும் ஒரு நிலையிலேயே ராஜிவ் காந்தி இருந்துவந்தார்.
இந்தியாவின் பிராந்திய நலன்களை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுக்கும் நோக்கத்தில் காய்களை நகர்த்திக்கொண்டிருந்த இந்திய புலனாய்வுப் பிரிவினரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கண்களை மூடிக்கொண்டு அவர் அனுமதி வழங்கிவந்தார்.
இதனால் ஈழத் தமிழர் பற்றி உண்மையான அக்கறை எதனையும் அவரால் காண்பிக்கமுடியாமல் போயிருந்தது. ‘ஈழப்பிரச்சனையில் இந்தியா முழுமூச்சுடன் இறங்கியிருந்த ஒரு சந்தர்ப்பத்தில், இந்தியாவின் தலைவர் ராஜிவ் காந்தி அவர்களுக்கு ஈழத்தின் நிலப்பரப்பு பற்றிய அறிவு போதியளவு இல்லாது இருந்திருந்தது என்று ஈழத் தமிழர்களின் முக்கிய தலைவர் ஒருவர் ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார்.
அந்தத் தமிழ் தலைவர் வேறு யாரும் அல்ல. இந்தியாவின் அத்தனை ஈழ விரோத நடவடிக்கைகளுக்கும் துனை போய்கொண்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் அவர்களே, ராஜிவ் காந்தி பற்றி இவ்வாறு தெரிவித்திருந்தார்.
‘செல்வா ஈட்டிய செல்வம் என்ற தலைப்பில் இலங்கை-இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு பற்றி அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் எழுதியிருந்து நூல் ஒன்றிலேயே இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
செல்வா ஈட்டிய செல்வம்
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மகாநாடு இந்தியாவின் பெங்களுர் நகரில் 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.
அந்த மாநாட்டின்போது ஈழப் பிரச்சனைக்கான தீர்வு சம்பந்தமாக சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜயவர்த்தனாவுடன் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி பலமணிநேரம் பேச்சுவார்த்தை நடாத்தனார்.
இனப்பிரச்சனைக்கு தீர்வாக தெரிவிக்கப்பட்டிருந்த உத்தேச மாநில சுயாட்சி பற்றி அங்கு ஆராயப்பட்டது. காணிப் பங்கீடு, கவர்ணரின் அதிகாரம் போன்ற விடயங்களுக்கு சிறிலங்கா தரப்பில் இருந்து சில மாற்று யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
அதாவது, வடக்கு கிழக்கு மாகாண இணைப்புப் பற்றிய யோசனைக்கு மாற்றாக, கிழக்கு மாகாணத்தை மூன்று மாகாணங்களாகப் பிரிக்கும் ஓர் ஆச்சரியமான திட்டம் சிறிலங்கா அரசினால் முன்வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தோடு திருகோணமலை, அம்பாறைமாவட்டங்களில் உள்ள தமிழ் பகுதிகளை இணைத்து ஓர் தமிழ் மாகாணமும், எஞ்சிய திருகோணமலை மாவட்டம் ஒரு சிங்கள மாகாணமாகவும், அம்பாறை மாவட்டம் ஒரு முஸ்லிம் மாகாணமாகவும் பிரிக்கப்படுவதற்கான யோசனையை ஜே.ஆர். முன்வைத்திருந்தார்.
கிழக்கு மாகாணக் குடிசன இனவாரி அமைப்பு பற்றி மிகத் தவறான கருத்தைக் கொடுக்கக்கூடிய வரைபடங்களையும் ஜே.ஆர். இந்திய அதிகாரிகளிடம் வழங்கியிருந்தார்.
இந்த பொய்யான வரைபடங்கள் பற்றி தமிழர்கள் தரப்பு எவ்வளவோ எடுத்துக் கூறியபோதிலும், ராஜிவ் காந்தி , இந்திய அதிகாரிகளும் அதனை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை.
இந்த பொய்யான வரைபடங்களின் அடிப்படையில், ஜே.ஆர். முன்வைத்த காணிப்பங்கீட்டுத் திட்டத்திற்கு தமிழ் அமைப்புக்களைச் சம்மதிக்கவைக்க இந்திய அரசு அவசரம் காண்பித்தது.
இரவோடு இரவாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனை பெங்களுருக்கு அழைத்து இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்படி அவரை இந்திய அரசு நிர்ப்பந்தித்தது.
ராஜிவ் காந்தி
ராஜிவ் காந்தி மற்றும் இந்திய அதிகாரிகளுடன் பிரபாகரன் நீண்ட விவாதங்களை நடாத்தியபோதும், இதற்கு தீர்வெதுவும் காணப்படவில்லை. இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு பிரபாகரன் ஒரேயடியான மறுப்புத் தெரிவித்து விட்டார்.
திருகோணமலையை சிங்கள மாகாணமாக்கித் தன்பிடிக்குள் வைத்திருக்கும் ஜே.ஆரின் திட்டத்தில், நீண்ட கால நோக்கத்தில் அமைந்த சதி ஒன்றும் காணப்பட்டிருந்தது.
வடக்கையும், கிழக்கையும் இணையவிடாது, இடையில் சிங்கள பிரந்தியம் ஒன்றை அமைத்து வடக்கு கிழக்கை நிரந்தரமாகக் கூறு போட்டுவிடும் திட்டத்திலேயே ஜே.ஆர். அந்த மூன்று கிழக்கு மாகாணங்களின் யோசனையை முன்வைத்திருந்தார்.
ஜே.ஆரின் இந்த கபட திட்டம் பற்றி பிரதமர் ராஜீவ் காந்தியிடம் தமிழ் தலைவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த யோசனையை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார். கிழக்கு மாகாணம் இந்த விடயம் பற்றி அமிர்தலிங்கம் தனது நூலில் குறிப்பிடும் போது, ‘…..இந்திய அதிகாரிகளும், இந்தியப் பிரதமரின் ஆலோசகர்களும், கிழக்கு மாகாணம் பற்றிய மிகத் தவறான கருத்தையே கொண்டிருந்தார்கள்.
ஜே.ஆரின் இந்த கபட திட்டம்
வடக்கு மாகாணத்தில் இருந்து நிலத்தொடர்புகள் எதுவும் அற்ற ஒரு தனி பிரதேசமே இந்தக் கிழக்கு மாகாணம் என்று அவர்கள் எண்ணியிருந்தார்கள்.
கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றத்தின் வரலாறும் அதன் தாக்கமும் பற்றியும், அங்கு புதிதாக ஏற்படுத்தப்பட்ட தேர்தல் தொகுதிகள் மற்றும் நிர்வாகப் பிரிவுகள் பற்றியும், புதிய சிங்கள நிர்வாகப் பிரிவுகளில் அபிவிருத்தி செய்யப்படாத தமிழ் நிலங்களையெல்லாம்; சேர்த்த சிங்கள அரசின் சூழ்ச்சி பற்றியும், 1983ம் ஆண்டு கலவரங்களின் பின் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பற்றியும், இந்திய அதிகாரிகளுக்கு முதலில் இருந்து விரிவாக விளக்கவேண்டி இருந்தது.. என்று அமிர்தலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.
1986ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதியே இதுபற்றி இந்திய அதிகாரிகளிடம் தாம் இந்தத் தரவுகளை வழங்கியிருந்ததாக திரு.அமிர்தலிங்கம் தனது நூலில் தொவித்திருக்கின்றார்.
அப்படியானால், ஈழமக்கள் போராட்டம் மேற்கொள்வதற்கு அடிப்படையாக இருந்த காரணங்கள் தெரியாத நிலையிலேயே இந்தியா இலங்கை விவகாரத்தில் தலையிட்டிருந்ததா என்கின்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
1986ம் ஆண்டு டிசம்பரில் இனப்பிரச்சனைத் தீர்வு பற்றி பேச்சுவார்த்தை நடாத்துவதற்கென்று இந்திய அமைச்சர்களான சிவசிதம்பரமும், நட்வர்சிங்கும் கொழும்பு செல்வதற்கு முன்னர், சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தில் அவர்களைச் சந்தித்து, இலங்கையின் கிழக்கு மாகாணம் பற்றிய உண்மையான வரைபடத்தையும், அதன் பூகோள விபரத்தையும் தாம் வழங்கியதாக திரு.அமிர்தலிங்கம் தனது நூலில் மேலும் தெரிவித்திருக்கின்றார்.
இது, ஈழத்தமிழர்களுக்கு சார்பாகவென்று கூறிக்கொண்டு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்த இந்திய அதிகாரிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும், ஈழநாட்டின் வரைபடம் முதற்கொண்டு ஈழ வரலாறு பற்றிய எந்தவித அடிப்படையும் இல்லாது இருந்திருக்கின்றது என்பதை புலப்படுத்துவதாக உள்ளது.
அதுவும் இலங்கை நாட்டில், ஈழ மண்ணில் இந்தியாவின் நேரடித் தலையீடு இடம்பெறுவதற்கு சில மாத காலம் வரை கூட ஈழத்தின் பூகோள வரைபடவிபரம் இந்தியாவிடம் இல்லாதிருந்தது ஆச்சரியமான விடயம்தான்.
அப்பொழுது இந்தியாவிடம் இருந்ததெல்லாம் இந்திய நாட்டின் பூகோள நலன் மட்டும்தான் என்பது இதிலிருந்து தெளிவாகவில்லையா?
தொடரும்..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |