ராஜீவ் காந்தியின் கோபத்தை உச்சத்திற்கு கொண்டு சென்ற புலிகள்!
இந்தியப் படையினர் புலிகளுடன் யுத்தம் புரிந்துகொண்டிருந்த காலப்பகுதிகளில் இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினாலேயே நெறிப்படுத்தப் பட்டுக்கொண்டிருந்தது.
இந்தியப் படைனரது நடவடிக்கைகள் அனைத்தும் எவ்வாறு நெறிப்படுத்தப்பட்டன என்பது பற்றி இந்தியப் படைகளின் அதிகாரி லெப்டினட் ஜெனரல் திபீந்தர் சிங் தனது புத்தகத்தில் தெரிவித்திருந்தார்.
“களமுனையில் சண்டையிட்டுக்கொண்டிருந்த ஒவ்வொரு பிரிகேட் படையணியும் டிவிசன் தலைமையகத்தினால் நெறிப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தன.
அந்த டிவிசன் தலைமையகங்கள் சென்னையிருந்த HQ OFC, IPKF என்ற அமைதிப்படைத் தலைமையகம் பூனேயில் இருந்த தென்பிராந்திய இராணுவத் தலைமையகம் (GQ Southern Command) மற்றும் டெல்லியிலிருந்த இந்திய இராணுவத் தலைமையகம் (Army HQ) என்பனவற்றில் இருந்து உத்தரவுகளை பெற்றுச் செயற்பட்டன.
புது டெல்லியில் இருந்த அரசியல் வட்டாரங்களும் இராணுவத் தலைமையகத்துடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்தது.
உள் விவகார அமைச்சர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், அமைச்சரவை செயலாளர், முப்படைத் தளபதிகளின் உதவியாளர்கள், RAW, NIB போன்றனவற்றின் பொறுப்பாளர்கள், தகவல் அதிகாரிகள் போன்றவர்களுடன் முக்கியமாக பிரதம மந்திரியின் அலுவலகம் எமது நடவடிக்கைகள் தொடர்பான நெறிப்படுத்தல்களில் நேரடி அங்கம் வகித்தன.
தினமும் காலை மாலை இரண்டு தடவைகள் இவர்கள் கூடி ஆராய்ந்து இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான முடிவுகளை எடுப்பார்கள். இராணுவத்தினர் அடுத்ததாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பணிப்புரைகளையும் வழங்குவார்கள்.
எமது நடவடிக்கைகள் தொடர்பான பத்திரிகையாளர் மாநாடுகளை வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் பார்த்தசாரதி நடாத்தி வந்தார். அவரது இந்த நடவடிக்கைகள் எமக்கு மிகவும் உறு துணையாக இருந்தன.இவ்வாறு திபீந்தர் சிங் இந்தியப் படை தொடர்பாக எழுதியிருந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கள முனையில் நடைபெற்ற அனைத்து விபரங்களும் உயர்மட்டம் வரை உடனடியாகவே அனுப்பப்பட்டு வந்தன.
அந்த உயர் மட்டம் என்பது பிரதமர் ராஜீவ் காந்தியின் நேரடி நெறிப்படுத்தலில் செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒரு குழுவாகும். ஆக மொத்தத்தில் ஈழ மண்ணில் இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் அனைத்துமே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினாலேயே நேரடியாக நெறிப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தன.
ராஜீவின் மனநிலை
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு பாடம் படிப்பித்தேயாகவேண்டும் என்ற வெறி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் இருந்ததாக அப்பொழுது அவருடன் நெருங்கிப் பழகிய பலர் பின்னர் தெரிவித்திருந்தார்கள்.
இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை புதிதாக ஏற்றிருந்த ராஜீவ் காந்தி ஒரு கௌரவம் மிக்க புரட்சித் தலைவராக உலகில் வலம் வர ஆரம்பித்திருந்த அந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளிடம் அடி வாங்குவது அவருக்கு பாரிய ஒரு கௌரவப் பிரச்சினையாகவே இருந்தது.
அவர் இலங்கை அரசுடன் செய்துகொண்டிருந்த சர்வதேசப் புகழ் வாய்ந்த ஒப்பந்தத்தை புலிகள் ஏற்கவில்லை என்பது அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது.
இலங்கையில் அமைதி திரும்பப் பாடுபட்ட ராஜீவின் பெயர், அமைதிக்கான அடுத்த நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்படவேண்டும் என்று இந்தியப் பத்திரிகைகள் கட்டம் கட்டிச் செய்தி வெளியிட்டுவருகையில் புலிகள் அவருக்கு ஒத்துழைக்காதது ராஜீவை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக, ராஜீவ் ஆட்சிக்கட்டில் அமர்ந்தவுடன் சுவீடனில் உள்ள போர்போஸ் ஆயுதக் கம்பனி போன்ற பாரிய ஆயுதக்கம்பனிகளிடம் இருந்து நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்து இந்தியாவை ஒரு வல்லரசு ரேஞ்சுக்கு கோண்டு செல்லுவதாக பம்மாத்துக் காண்பித்துக்கொண்டிருந்த போது, இலங்கையில் ஒரு சிறு போராளிக் குழுக்களிடம் இந்தியப் படை மரண அடி வாங்கிக்கொண்டிருப்பது ராஜீவிற்கு மிகவும் அவமானமாக இருந்தது.
ராஜீவின் உத்தரவு
அதுவும் பாகிஸ்தான், சீனா போன்ற எதிரி நாடுகளை தனது இராணுவ பலத்தைக் கொண்டு இனிமேல் மிரட்ட முடியாத ஒரு சூழ் நிலை உருவாகிவிட்டது பற்றியும் அவருக்கு கவலையாக இருந்தது.
இவை அனைத்திற்கும் காரணமான புலிகளை பழிதீர்க்கவேண்டும் என்ற வெறியில், இந்தியப் படை என்ன செய்தாவது புலிகளை ஒழித்துவிடவேண்டும் என்ற உத்தரவை இந்திய இராணுவத்திற்கு வழங்கியிருந்தார்.
புலிகளிடம் தமக்கு ஏற்பட்டிருந்த ஆரம்ப தோல்விகளுக்கு பொதுமக்களின் உயிரிழப்புக்கள் பற்றி இந்தியப் படைகள் அதிகம் கவலைப்பட்டதே காரணம் என்று இந்தியப் படை அதிகாரிகள் சப்பைக்கட்டு கட்டியதற்கு, என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை.
பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை. புலிகளை வெற்றிகொண்டுவிடவேண்டும். அதுவும் உடனடியாக அதைச் செய்யவேண்டும் என்று ராஜீவ் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஈழத்தமிழர்களைக் கொல்வதற்கு ராஜீவ் காந்தி உத்தரவு பிறப்பித்தார். அதனை இத்திய இராணுவத்தினர் கடைப்பிடித்தார்கள். ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியத் துரோகங்கள் புதிய உருவில் மிக மோசமான முறையில் தொடர்ந்தன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |