சட்டத்தரணி ரகித ராஜபக்சவின் வங்கிக் கணக்குகள், வாகனங்கள் முடக்கம்
அண்மையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முடக்கப்பட்ட சட்டத்தரணி ரகித ராஜபக்சவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் மற்றும் வாகனங்களை மூன்று மாத காலத்திற்கு முடக்கி வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்னவுக்குச் சாதகமான நடவடிக்கைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக, அவரது மனைவியிடமிருந்து 12 கோடி ரூபாய் இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதத் தடை
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதனடிப்படையில், ரகித ராஜபக்சவுக்குச் சொந்தமான நான்கு வங்கிக் கணக்குகள் மற்றும் இரண்டு சொகுசு வாகனங்கள் தொடர்பில் மூன்று மாதங்களுக்கு முடக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் சுமார் நான்கு கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, இந்த வழக்கில் ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு வழங்கப்பட்ட பிணையை இரத்துச் செய்யுமாறு கோரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் மனுக்களையும் தாக்கல் செய்துள்ளது.
குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணை 2027ஆம் ஆண்டு பெப்ரவரி 9ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், பிரதிவாதிகள் தமது ஆட்சேபனைகளை நவம்பர் 14ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |