பிரித்தானியாவில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக ஊர்தி எழுச்சிப்பயணம்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு (P. Ariyanethiran) ஆதரவளிக்கும் நோக்கத்துடன் பிரித்தானிய (United Kingdom) தமிழ் தேசிய அமைப்புகள் இணைந்து மாபெரும் வாகனப் பேரணியும் மற்றும் பொதுக் கூட்டத்தையும் நடத்தவுள்ளனர்.
குறித்த ஊர்தி எழுச்சிப்பயணமானது, “நாமும் இணைந்தால் பலமே” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் (Sri Lanka) நடைபெற்ற எட்டு ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி பெற்ற சிங்கள தலைவர்கள் அனைவரும் தமிழ் மக்களின் உரிமைகளை வழங்காது தொடர்ச்சியாக ஏமாற்றி வந்த நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள் சார்பில் தமிழ் பொது வேட்பாளராக சங்கு சின்னத்தில் பா.அரியநேத்திரன் களமிறங்கியுள்ளார்.
ஆதரவு அறிக்கை
இந்தநிலையில், பா. அரியநேத்திரனை ஆதரித்து பிரித்தானியாவில் நடைபெறவுள்ள மாபெரும் வாகனப் பேரணி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது போல் நாமும் இணைந்தால் பலமே என்ற உணர்வுடன் நடைபெறவுள்ள குறித்த வாகனப் பேரணியில் பிரித்தானிய வாழ் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்தோடு, எதிர்வரும் தேர்தலில் தாயகத்தில் உள்ள உங்களது உறவுகளை இம்முறை தமிழ்தேசியத்தை வலுப்படுத்த சங்கு சின்னத்திற்க்கு மட்டும் வாக்களிக்க புலத்திலிருந்து அனைவரும் செயற்பட வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எழுச்சிப்பயணம்
இதனடிப்படையில், தியாக தீபம் திலீபன் நோன்பிருந்த ஆரம்ப நாளான இன்று (15) பிரித்தானியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலிருந்து ஆதரவு கோரும் ஊர்தி எழுச்சிப்பயணம் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த எழுச்சிப்பயணமானது இன்றைய தினம் (15) Roxeth recreation ground Ha2 8LF South Harrow என்ற இடத்தில் மாலை 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில், வாகன ஊர்திப் பேரணியில் கலந்து கொண்டு சிறிலங்காவில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியத்தின் பொது வேட்பாளர் தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்கு ஆதரவு வழங்குமாறு பிரித்தானிய தமிழ்தேசிய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |