றம்புக்கணை துப்பாக்கிசூடு - காவல்துறை மா அதிபரின் கையை மீறிய செயலா.....!
றம்புக்கணையில் பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு துப்பாக்கி சூட்டை நடத்துமாறு தாம் அங்கிருந்த காவல்துறையினருக்கு உத்தரவை வழங்கவில்லை என காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
றம்புக்கணை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட சில சிரேஷ்ட அதிகாரிகள் இன்று முற்பகல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அதற்கமைய, மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழுவின் முன்னிலையில் குறித்த அதிகாரிகள் இன்று காலை முன்னிலையாகினர். இதன்போதே காவல்துறை மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த துப்பாக்கிசூட்டின் பின்புலத்தில் அரசின் மூன்று அமைச்சர்கள் உள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
