பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: முக்கிய சந்தேக நபர்கள் கைது
பெங்களூர் (Bengaluru) - ராமேஸ்வரம் உணவகத்தின் (Rameswaram Cafe) குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மார்ச் 1 ஆம் திகதி பெங்களூரில் உள்ள பிரபல ராமேஸ்வரம் உணவகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பதுடன் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பத்து பேர் காயமடைந்தனர்.
குண்டு வைக்கப்பட்ட இடத்தில் குறைந்த கூட்டம் மற்றும் வெடிப்பின் தாக்கத்தை கட்டுப்படுத்திய பெரிய தூண் அருகில் இருந்ததன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்படவில்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருவர் கைது
இந்த நிலையில், கடந்த மாதம் பெங்களூரில் உள்ள பிரபல ராமேஸ்வரம் உணவகத்தில் குண்டு வைத்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவர் மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) இன்று (12) அறிவித்துள்ளது.
முஸ்ஸாவிர் ஹுசைன் ஷாஸெப் (Mussavir Hussain Shazeb) மற்றும் அப்துல் மத்தீன் தாஹா (Abdul Matheen Taha) ஆகியோர் கிழக்கு மித்னாபூர் (Midnapore) மாவட்டத்தின் கந்தி (Kanthi) பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
எனினும், அவர்கள் மேற்கு வங்காளத்துக்குள் பிரவேசித்த இரண்டு மணி நேரத்துக்குள் மாநில காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
தேசிய புலனாய்வு முகமை, மத்திய உளவுத்துறை அமைப்புகள் மற்றும் மேற்கு வங்காளம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா காவல்துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றம் அனுமதி
தேசிய புலனாய்வு முகமை விசாரணையில், ஷாஸெப் தான் ராமேஸ்வரம் கஃபேவில் வெடிபொருளை வைத்ததாகவும், தாஹா தாக்குதலை திட்டமிட்டு தப்பி ஓடுவதற்கு உதவியாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த வழக்கில் இது இரண்டாவது மற்றும் மூன்றாவது கைது நடவடிக்கை ஆகும். கடந்த மாதம், இவர்களுக்கு உதவி புரிந்ததாக கூறப்படும் முஸம்மில் ஷரீப் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 18 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்திய பின்னரே ஷாஸெப்பையும், தாஹாவையும் மேற்கு வங்காளத்தில் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தநிலையில் இன்று (12) கைது செய்யப்பட்ட குறித்த இருவரையும் மூன்று நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |