கொழும்பு துறைமுகசட்டமூலம் தொடர்பில் அபாய சங்கு ஊதியுள்ள ரணில்
கொழும்பு துறைமுகம் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம், மிகவும் அபாயகரமானது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அபாய சங்கு ஊதியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு துறைமுக நகர் தொடர்பில் அரசாங்கம், அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும். கொழும்பில் நிதி மத்திய நிலையமொன்றை ஏற்படுத்துவதற்கான யோசனையொன்றை தான் 2016ம் ஆண்டு அமைச்சரவையில் முன்வைத்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையிலேயே, துறைமுக நகரை ஸ்தாபிப்பதற்கும் தாம் தீர்மானித்ததாக அவர் தெரிவித்தார். இந்த நிதி மத்திய நிலையம் தொடர்பிலான சட்டம் வகுக்கப்பட்டதாகவும் துறைமுக நகர் இலங்கைக்கு சொந்தமானது எனவும், அது நாட்டின் பொருளாதாரத்தின் ஒரு பகுதி எனவும் அவர் குறிப்பிட்டார்.
துறைமுக நகரிலுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஏனைய பணிகளை முன்னெடுப்பதானது, அந்த பணிகளை முன்னெடுக்கும் நிறுவனத்தின் பொறுப்பாகும். இந்த விடயம் தொடர்பில் சட்டமூலம் ஒன்று தயாரிக்கப்பட்டது. இந்த சட்டமூலத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரத்தை பாதுகாத்துக்கொண்டதாகவும், சட்டவாக்க சபையின் அதிகாரங்களை பாதுகாத்துக்கொண்டதாகவும், அமைச்சரவையின் அதிகாரங்களை பாதுகாத்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலம், மிக அபாயகரமானது என அவர் தெரிவித்தள்ளார். நிறைவேற்று அதிகாரம், இல்லாது செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டவாக்க சபையின் அதிகாரங்கள் இல்லாது செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவையின் அதிகாரங்கள் இல்லாது செய்யப்பட்டுள்ளதாகவும் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான ஒரு விடயம் இடம்பெற்றிருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
ஏன் இவ்வாறான விடயங்களை செய்கின்றார்கள் என அறிந்து கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அரசாங்கம் இவ்வாறு செய்வதன் ஊடாக, நிதி சலவை செய்யப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. நிதி அமைச்சின் அதிகாரங்கள் இல்லாது செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான மத்திய நிலையமொன்று உருவாக்கப்படுமாக இருந்தால், நாட்டிலுள்ள அனைவருக்கும் விருப்பம் என கூறிய அவர், இந்த விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினரும் கலந்துரையாட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
நிறைவேற்று, சட்டவாக்கம் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை பாதுகாத்து, இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.